50 பாகிஸ்தான் வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரர் பிரேம் சாகர் மகள் ஆவேசம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த தனது தந்தையின் உயிர் தியாகத்துக்கு பதிலாக, 50 பாகிஸ்தான் வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று அவரது மகள் ஆவேசகத்துடன் கூறியுள்ளார்.
50 பாகிஸ்தான் வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரர் பிரேம் சாகர் மகள் ஆவேசம்


புது தில்லி: எல்லைப் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த தனது தந்தையின் உயிர் தியாகத்துக்கு பதிலாக, 50 பாகிஸ்தான் வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று அவரது மகள் ஆவேசகத்துடன் கூறியுள்ளார்.

பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசியதுடன், தானியங்கி துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுப்பதற்காக பிஎஸ்எஃப் முகாமில் இருந்து 8 வீரர்கள் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் மீது, இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் அளவுக்கு ஊடுருவி வந்து மறைந்திருந்த பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங், பிஎஸ்எஃப் படைப்பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகிய 2 பேர் பலியாகினர். பிஎஸ்எஃப் காவலர் ராஜீந்தர் சிங் என்பவர் காயமடைந்தார்.

இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'உயிரிழந்த 2 வீரர்களின் சடலங்கள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினரால் சிதைக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 2 பேரின் தலைகளும் பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரால் துண்டிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். மேலும் அவர், பாகிஸ்தான் படையினர் நீண்டநாளாக திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், தனது தந்தை பிரேம் சாகரின் வீர மரணம் குறித்து கண்ணீருடன் பேசிய அவரது மகள், 'அவரது தியாகத்துக்கு, 50 ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும்' என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இதே போல பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பரம்ஜித் சிங்கின் சிதைக்கப்பட்ட உடல் இறுதி மரியாதைக்காக தர்ன் தரன் கிராமத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, அவரது உடலைப் பார்க்காமல், இறுதிச் சடங்கு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அவரது உடலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டது. எனினும், பெட்டியில் மூடி வைக்கப்பட்டிருக்கும் இந்த உடல் யாருடையது என்று உறவினர்கள் ஆவேசப்பட்டனர்.

இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் படையினரின் இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் (பொறுப்பு) அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

வீரர்களின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும். இதை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள், போர் காலத்தில் கூட நடைபெற்றது இல்லை. இதுவொரு கண்டிக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது; பாகிஸ்தான் படையினரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஒட்டுமொத்த நாடும் நம்புகிறது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி, புலனாய்வு படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கினர். அப்போது எல்லையில் தீவிர கண்காணிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

தகுந்த பதிலடி- இந்தியா

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாகிஸ்தானின் வெறுக்கத்தக்க செயலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் திங்கள்கிழமை சென்றார்.


பாகிஸ்தான் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டிவந்து இந்திய வீரர்கள் 2 பேரின் தலைகளை துண்டித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா குற்றம்சாட்டுவது போன்று, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எந்த அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. 2 வீரர்களின் சடலங்களை சிதைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் உயர்ந்த நாகரிகம் கொண்டது. வீரரை ஒருபோதும் அவமதிக்காது என்று அந்த அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2016, 2013, 2008, 1999-ஆம் ஆண்டுகளிலும் எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொலை செய்து அவர்களது தலைகளை பாகிஸ்தான் படையினர் துண்டித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com