வீரர்கள் தலை துண்டிப்பு கொடூரச் செயல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கண்டனம்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தலைகளைத் துண்டித்தது, மனிதத்தன்மையற்ற கொடூரச் செயல் என்று பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் கண்டனம் தெரிவித்தது.
வீரர்கள் தலை துண்டிப்பு கொடூரச் செயல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கண்டனம்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தலைகளைத் துண்டித்தது, மனிதத்தன்மையற்ற கொடூரச் செயல் என்று பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவரை (டிஜிஎம்ஓ), இந்தியாவின் டிஜிஎம்ஓ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்திய வீரர்களின் தலை துண்டிப்புச் சம்பவம் இழிவான, மனிதத்தன்மையற்ற செயல் என்றும், காட்டுமிராண்டித்தனமானது என்றும் இந்திய டிஜிஎம்ஓ அப்போது கண்டனம் தெரிவித்தார்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவி, இந்தச் செயலை பாகிஸ்தானின் எல்லை அதிரடிப் படையினர் நிகழ்த்துவதற்கு உதவியாக, எல்லைக்கு அப்பாலிருந்து அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நிகழ்த்தியதாகவும் இந்திய டிஜிஎம்ஓ குற்றம் சாட்டினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எல்லை அதிரடிப் படை முகாம் அமைந்துள்ளது குறித்த தனது கவலையையும் அப்போது அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தியா கூறுவது போன்ற தலை துண்டிப்பு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக முகாமில் இருந்து 8 பிஎஸ்எஃப் வீரர்கள் வெளியே வந்தபோது அவர்கள் மீது, இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் அளவுக்கு ஊடுருவி வந்து மறைந்திருந்த பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜித் சிங், பிஎஸ்எஃப் படைப்பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகிய 2 பேர் பலியாகினர். பிஎஸ்எஃப் காவலர் ராஜீந்தர் சிங் என்பவர் காயமடைந்தார்.
உயிரிழந்த இரு வீரர்களின் தலைகளும் பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரால் துண்டிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் (பொறுப்பு) அருண் ஜேட்லி, பாகிஸ்தான் படையினரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.
காஷ்மீர் ஆளுநருடன் ராஜ்நாத் ஆலோசனை: இந்தச் சூழலில், காஷ்மீர் பள்ளத்தாக்கு நிலவரம் குறித்து, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வீரர் உடல் தகனம்: இதற்கிடையே, பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட இந்திய வீரர் பரம்ஜித் சிங்கின் உடல், பஞ்சாபிலுள்ள அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு உரிய மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

பழி தீர்க்க காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பழி தீர்க்க வேண்டுமென்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தில்லியில் கூறுகையில், ''தங்கள் கைகளில் அணிந்திருக்கும் வளையல்களை கழற்றி எறிந்துவிட்டு, பாகிஸ்தானை மோடி அரசு பழிக்குப் பழி வாங்க வேண்டும்'' என்றார். மேலும், மத்திய அரசிடம் தெளிவான பாதுகாப்புக் கொள்கை இல்லை என்று விமர்சித்த அவர், பாதுகாப்புத் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படும்வரை சரியான பாதுகாப்புக் கொள்கையை வகுக்க முடியாது என்றார்.
இதற்கு பெங்களூரில் பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் மன வலிமை மத்திய அரசுக்கு உள்ளது; அந்த மன வலிமை காரணமாக பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்றார்.
மோடியின் ஆட்சியில், இந்தத் தலை துண்டிப்பைப் போன்று 3 சம்பவங்கள் நடந்துள்ளதாக பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் பாதுகாப்புப் படையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறுகையில், ''இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நிகழ்த்திய பிறகு, அதைப் போல் பத்து மடங்கு இந்திய வீரர்களை பாகிஸ்தான் கொன்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பழி தீர்த்தே ஆக வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com