இந்திய வீரர்கள் தலை துண்டிப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரம் உள்ளது: இந்தியா

இந்திய ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் படையினர் துண்டித்ததை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் தலை துண்டிப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரம் உள்ளது: இந்தியா

இந்திய ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் படையினர் துண்டித்ததை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வீரர்களின் தலையை துண்டித்ததற்காக, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தை கோபமூட்டும் செயலாகவே இந்தியா கருதுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிருஷ்ணாகாட்டி பகுதியை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் உயிரிழந்த 2 இந்திய வீரர்களின் ரத்த மாதிரிகள் பொருந்துகின்றன.
எனவே, இந்திய வீரர்களைப் படுகொலை செய்ததில் பாகிஸ்தான் படையினர் ஈடுபட்டிருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா உறுதியுடன் நம்புகிறது. சதிகாரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டு, பிறகு அதே வழியில் திரும்பிச் சென்றிருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் மறுத்து விட்டார். மேலும், இந்தியாவின் புகாரை அவர் தனது அரசிடம் தெரிவிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார் என்றார் கோபால் பாக்லே.
தூதரை நேரில் அழைத்து கண்டனம்: இதனிடையே, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் வரவழைத்து, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இரு இந்திய வீரர்களை கொலை செய்து, அவர்களது உடல்களையும் சிதைத்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூர செயல் தொடர்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் அழைப்பாணை அனுப்பினார்.
அதன்படி, வெளியுறவு அமைச்சகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான அப்துல் பாசித்திடம், பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கை குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த 1-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் சுமார் 250 மீட்டர் ஊடுருவி, பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் சீக்கிய படைப் பிரிவைச் சேர்ந்த சுபேதார் பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் பிரேம் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இருவரின் உடல்களையும், பாகிஸ்தான் படையினர் சிதைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநரிடம், இந்திய ராணுவ தலைமை இயக்குநர் ஏ.கே.பட் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மாணவர்களை திருப்பியனுப்பியது இந்தியா!
இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த பாகிஸ்தான் மாணவர்கள் 50 பேர் புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனர்.
தில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டின்பேரில், பாகிஸ்தானைச் சேர்ந்த 11 முதல் 15 வயதுடைய மாணவர்கள் 50 பேரும், சில ஆசிரியர்களும் கடந்த 1-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள், உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும், தில்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வியாழக்கிழமை இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மாணவர்கள் இந்தியாவுக்கு வந்த அதே நாளில்தான், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டு, அவர்களது உடல்களும் சிதைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் படையினரின் இந்த மனிதத் தன்மையற்ற செயல், இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சூழலில், பாகிஸ்தான் மாணவர்கள் இங்கு உபசரிக்கப்படுவது பொருத்தமாக இருக்காது; எனவே, அவர்களை திருப்பியனுப்பும்படி சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தை இந்திய ராணுவம் அறிவுறுத்தியது. இதையடுத்து, 50 மாணவர்களும், ஆசிரியர்களும் லாகூருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com