குடியரசுத் தலைவர் தேர்தல்: ஸ்டாலின், மம்தா, மாயாவதியுடன் சோனியா விரைவில் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
குடியரசுத் தலைவர் தேர்தல்: ஸ்டாலின், மம்தா, மாயாவதியுடன் சோனியா விரைவில் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
எதிர்க்கட்சி வேட்பாளர்: இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. எனினும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
தலைவர்களுடன் ஆலோசனை: இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஏற்கெனவே சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி, மக்களவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் விரும்புவதால், இந்த சந்திப்புகள் தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
ஸ்டாலினுடன் விரைவில் ஆலோசனை: இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோருடன் சோனியா காந்தி விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தவிர காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா, சோனியா காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை - டி.ராஜா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான டி.ராஜா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக பேசினேன். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com