காஷ்மீரில் ராணுவம் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள தர்க்வாங்காம் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள தர்க்வாங்காம் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 4,000 ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராணுவத்தினர், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோர் இந்த வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
12 மணி நேரம் நீடித்த தேடுதல் வேட்டையின் முடிவில், கோதாவரி குந்த் மற்றும் கெல்லார் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், உள்ளூர்வாசி ஒருவர் உயிரிழந்தார். 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களைக் குறிவைத்து அதிகாலை வேளைகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குல்காம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 போலீஸார் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர். மேலும், காவலர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் பறிக்கப்படும் சம்பவங்களும், வங்கிகளில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள 20 கிராமங்களில் 4,000 ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆளில்லா விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
சோபியான் மாவட்டத்தில் உள்ள சில்லிப்போரா, சுகான், தர்க்வங்காம், ஹெஃப், ஷிர்மல், டிரகாட், மால்டையர், டச்சு, குக்தி, நல்லி போஷ்வாரி, தாரஸ்போரா உள்ளிட்ட கிராமங்களில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அந்தப் பகுதிகளில் தீவிரவாதிகள், வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆகியோர் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதற்கான எந்தத் துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
தர்வாங்காம் கிராமத்தில் சிறு கல்வீச்சு சம்பவத்தைத் தவிர்த்து, அசம்பாவிதம் எதுவுமின்றி அமைதியான முறையில் தேடுதல் வேட்டை நடைபெற்றது என்றும் அவர் கூறினார்.
கடந்த 1990-ஆம் ஆண்டுடன் காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் நடவடிக்கை நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால், அதுபோன்ற நடவடிக்கை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. கிராமத்தினர் அனைவரும் பொதுவான ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம்- விபின் ராவத்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் சூசகமாகத் தெரிவித்தார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு, ''பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதான நடவடிக்கைக்கான திட்டத்தை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது; அந்தத் திட்டத்தை செயல்படுத்திய பிறகே பகிரங்கப்படுத்துவோம்'' என்று விபின் ராவத் பதிலளித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே, பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்துமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அவர் அளித்த பதில்: பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வருகின்றனர். கோடை தொடங்கியதும், எல்லைப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிட்டன. வழக்கமாக, எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் தொடங்கி விடும். எனவே, பயங்கரவாத ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருக்கிறோம்.
காஷ்மீரில் சில வங்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. காவலர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று விபின் ராவத் கூறினார்.

'ராணுவச் செலவு சுமையல்ல'


''ராணுவத்துக்காக செலவு செய்வது சுமையல்ல'' என்று விபின் ராவத் கூறினார்.
தில்லியில் பாதுகாப்புத் துறை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:
ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டுமெனில் வலுவான ராணுவ கட்டமைப்பு அவசியமாகும். ஆனால், ராணுவத்துக்குச் செலவு செய்வதை சுமையாகவே பலரும் கருதுகின்றனர்.
இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், உரிய நிதியை ராணுவம் பெறவில்லை. சீனாவை ஒப்பிடுகையில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்திய அரசு குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான், ஈரான், இராக் போன்ற நாடுகளுடான உறவுகளை இந்தியா மேலும் வலுப்படுத்த வேண்டும். இப்போது வரை நம்மிடம் தேசிய அளவிலான ராணுவ போர்த் தந்திரக் கொள்கை இல்லை.
எனவே, பாதுகாப்புத் துறையின் சவால்களை எதிர்கொள்வதற்காக, தேசிய ராணுவ போர்த் தந்திரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக் கொள்கை ஆகியவற்றை விரைவில் வகுக்க வேண்டும் என்றார் விபின் ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com