கேஜரிவால் மீது கபில் மிஸ்ரா ஊழல் புகார்: அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுத்ததாகக் குற்றச்சாட்டு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது ஊழல் புகார் எழுப்பியுள்ளார், பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில்
தில்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா.
தில்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது ஊழல் புகார் எழுப்பியுள்ளார், பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கபில் மிஸ்ரா.
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி அளித்ததை நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மறுத்துள்ளார்.
தில்லி சுற்றுலா மற்றும் நீர் வளத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், முதல்வர் கேஜரிவாலுக்கும் குமார் விஷ்வாஸுக்கும் இடையே ஆட்சி செயல்பாடு தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, குமார் விஷ்வாஸை நேரில் அழைத்து அரவிந்த் கேஜரிவால் மேற்கொண்ட சமாதான முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் பாஜகவில் சேரத் திட்டமிட்டு வருவதாக தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி நீர் வளத் துறை அமைச்சர் பதவிக்குரிய பணிகளை சரியாக ஆற்றவில்லை எனக் கூறி கபில் மிஸ்ராவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை இரவு திடீரென நீக்கினார். இதையடுத்து, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று கபில் மிஸ்ரா அஞ்சலி செலுத்தினார். பின்னர் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை ஞாயிற்றுக்கிழமை காலையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ஊழலில் ஈடுபடுவதாகக் கூறி அனில் பய்ஜாலிடம் அவர் மனு அளித்தார்.
கபில் மிஸ்ரா விளக்கம்: இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தில்லி முதல்வர் இல்லத்தில் இரு தினங்களுக்கு முன் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடியை முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் அளித்ததை எனது கண்களால் பார்த்தேன்.
இது தொடர்பாக முதல்வரிடம் கேட்டேன். அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு என முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் கேட்டதற்கு, 'கேஜரிவாலின் உறவினருக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய நில பேரத்தை முடித்து வைத்தேன்' என தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்த மீண்டும் கேஜரிவாலிடம் விவரத்தைக் கேட்ட போது, சத்யேந்திர ஜெயின் கூறியது பொய் என்றும், தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் கூறினார். ஆனால், என்னிடம் இருவரும் எதையோ மறைப்பதை உணர்ந்தேன்.
இந்நிலையில், முதல்வருக்கும் அமைச்சருக்கும் இடையிலான ஊழல் விவகாரத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பியதால் என்னை அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியுள்ளனர். எனது குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிப்பேன். சத்யேந்திர ஜெயின் சிறையில் தள்ளப்பட்டால்தான் எனது குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகும் என்றார் கபில் மிஸ்ரா.
ஆலோசனை: இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறுகையில், 'தில்லி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என கபில் மிஸ்ராவிடம் சனிக்கிழமை மாலையில் தெரிவித்தேன். தில்லியில் ஆங்காங்கே நிலவும் குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எல்எல்ஏக்கள் முறையிட்டதை விளக்கினேன். இந்நிலையில், முதல்வர் - சத்யேந்திர ஜெயின் தொடர்பாக அவதூறான கருத்தை கபில் மிஸ்ரா வெளியிட்டுள்ளார். அமைச்சராக அவர் சரிவரப் பணியாற்றவில்லை என்பதால்தான் அவர் நீக்கப்பட்டார்' என்றார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் கூறுகையில், 'கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளை கேஜரிவாலின் தீவிரமான எதிரிகள் கூட நம்ப மாட்டார்கள்' என்றார்.

தில்லியில் நடைபெறும் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் கவலை அடைந்துள்ளேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாகத்தான் அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தில்லியில் ஆறு அமைச்சர்களில் மூன்று பேர் பதவி விலகிய அடுத்த கணமே தலைநகருக்கு நல்லாட்சி கிடைக்கும் என்ற எனது கனவு சிதைந்து விட்டது. இது எனக்கு மிகவும் கவலை தருகிறது.
- சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே

'ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தில்லி முதல்வர் கேஜரிவால், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அவரது தலைமையிலான அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
- தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி

'இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) அல்லது மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும்'.
- தில்லி காங்கிரஸ் தலைவர்
அஜய் மாக்கன்

'அரவிந்த் கேஜரிவாலை எதேச்சதிகாரம் கொண்டவர், அரசியல் சந்தர்ப்பவாதி, பேராசை பிடித்தவர் என்று யாராவது கூறினால் அதை என்னால் நிச்சயம் நம்ப முடியும். ஆனால், அவர் லஞ்சம் வாங்கினார் என்று யாராவது குற்றம்சாட்டினால் அதற்கு முதலில் தகுந்த ஆதாரத்தை சம்பந்தப்பட்டவர் (கபில் மிஸ்ரா) வெளியிட வேண்டும். அதுவரை என்னால் அவரது குற்றச்சாட்டை நம்ப முடியாது.'
-ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர்
யோகேந்திர யாதவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com