நவீன் பட்நாயக் அமைச்சரவை மாற்றம்: 10 புதுமுகங்களுடன் 12 பேர் பதவியேற்பு: இணையமைச்சர்கள் இருவருக்கு கேபினட் அந்தஸ்து

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஸா அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.
புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற அமைச்சர்களுடன் ஒடிஸா மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர், முதல்வர் நவீன் பட்நாயக்.
புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற அமைச்சர்களுடன் ஒடிஸா மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர், முதல்வர் நவீன் பட்நாயக்.

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஸா அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் புதிய அமைச்சரவையில் 10 புதியவர்களுக்கு நவீன் பட்நாயக் வாய்ப்பளித்துள்ளார். இணையமைச்சர்கள் இருவருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 அமைச்சர்கள் பதவியேற்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி மற்றும் கலால் துறை கட்சியின் மூத்த தலைவரான சசிபூஷண் பெஹேராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு வசதியாக 10 அமைச்சர்கள் சனிக்கிழமை பதவி விலகினர். கடந்த 2014ஆம் ஆண்டு 4-ஆவது முறையாக தொடர்ந்து முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்ற பிறகு தற்போது முதன் முதலாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் காலை 9.15 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் பிற மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் அமைச்சர்களுக்குப் பதவியேற்பு மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தை ஆளுநர் எஸ்.சி.ஜமீர் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் விவரம்: பதவியில் இருந்து தற்போது விலகிய சட்டப் பேரவைத் தலைவர்
நிரஞ்சன் பூஜாரிக்கு வீட்டுவசதி, நகர்ப்புறம், தொழில் துறை அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை சட்டப் பேரவை முன்னாள் தலைவர் மகேஷ்வர் மொஹந்தி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பழைய முகமான சூர்ய நாராயண் பத்ரோ உணவு வழங்கல், கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை புரஃபுல்ல சமாலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வர்த்தக, போக்குவரத்துத் துறை இணையமைச்சராக இருந்த ரமேஷ் மஜிக்கு கேபினட் அந்தஸ்துடன் எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதாப் ஜெனாவுக்கு சுகாதாரம், சட்டம், குடும்ப நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உருக்கு, சுரங்கத் துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்த பிரஃபுல்ல மல்லிக், கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையில் இணையமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களில் சுஷாந்த் சிங்குக்கு தொழிலாளர் நலத் துறையும் அரசுத் தலைமைக் கொறடாவாக இருந்த ஆனந்த் தாஸுக்கு உயர்கல்வித் துறையும் அளிக்கப்பட்டுள்ளது. புதுமுகமான சந்திர சாரதி பெஹேரா அமைச்சரவையில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறையைக் கவனிப்பார். மேலும் வேறு சில அமைச்சர்களின் துறைகளையும் முதல்வர் மாற்றியமைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com