லாலு பிரசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத்துக்கு எதிரான மாட்டுத் தீவன முறைகேடு தொடர்பான 4 வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்குகளை அடுத்த 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
லாலு பிரசாத்துக்கு எதிரான 4 வழக்குகளில், அவர் ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். மற்ற 3 வழக்குகளிலும் அவர் விரைவில் தண்டிக்கப்படுவார். இதன்மூலம், அவர் மேலும் பல ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பெரும் ஆதாயம் அடைவார். கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் லாலு பிரசாத், இனி நிதீஷ் குமாருக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது.
அடுத்த 9 மாதங்களுக்கு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதைத் தவிர லாலு பிரசாத்துக்கு வேறு வேலை எதுவும் இருக்க முடியாது. உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதைப் போல், லாலு பிரசாத்தின் குடும்பத்தினரும் செய்யப் போகின்றனர்.
பிகாரில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. மாநில சட்டப் பேரவைக்கு எப்போது தேர்தல் நடைபெற்றாலும், பாஜக 3-இல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் சுஷில் குமார் மோடி.
ஜார்க்கண்ட் அமைச்சர் வரவேற்பு: லாலு பிரசாத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஜார்க்கண்ட் அமைச்சர் சரயு ராய் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 1996-இல் நானும், எனது நண்பர்களும் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தான் இந்தளவுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார் சரயு ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com