வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம்: தில்லி பேரவையில் ஆம் ஆத்மி செயல்விளக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று தில்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளித்தது.
தில்லி சட்டப்பேரவையில் செயல்விளக்கம் அளிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ்.
தில்லி சட்டப்பேரவையில் செயல்விளக்கம் அளிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று தில்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளித்தது.
மேலும், இனி வரும் தேர்தல்களில் ஒப்புகை சீட்டு கருவிகளுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு பின், வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
பஞ்சாப் பேரவைத் தேரத்லில் ஆம் ஆத்மிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள், சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணிக்கு திருப்பிவிடப்பட்டதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், தில்லி பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஏதேனும் ஓர் அரசியல் கட்சி ஆதாயம் அடையும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் மென்பொருளில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் செயல்விளக்கம் அளித்தார்.
பின்னர், அவர் கூறுகையில், 'ஒரு பொறியாளர் என்ற முறையில், இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்தேன். அதன் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை அறிந்துகொண்டேன். ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்துவதன் மூலம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் எளிதாக முறைகேடு செய்யலாம்' என்றார்.
தீர்மானம்: மேலும், இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை உறுதி செய்துகொள்ளும் ஒப்புகை சீட்டு கருவிகளையும் இணைத்து பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கை விடுக்கும் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தில்லி பேரவையில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 66 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


வாக்குப் பதிவு இயந்திரத்தில் வெறும் 90 நொடிகளில் முறைகேடு செய்துவிடலாம் என்பதை எம்எல்ஏ பரத்வாஜ் செய்துகாட்டினார். அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், இதுபோன்று பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த முறைகேடுகளுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
- தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற ஆம் ஆத்மியின் செயல் விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி பேரவையில் செயல்விளக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரம், தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரம் அல்ல. அது, 'மாதிரி' வாக்குப்பதிவு இயந்திரம். அதுபோன்ற இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பரீதியாக பாதுகாப்பானவை. அவற்றில் அவ்வளவு எளிதாக முறைகேடுகள் செய்துவிட முடியாது' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com