முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புது தில்லி: முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

முத்தலாக் செல்லத்தக்கதா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணையைத் தொடங்கியது.

இதில், பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது என்றும், முத்தலாக் மத ரீதியான அடிப்படை உரிமைக்குட்பட்டதா என  விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது.

முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் மத பெண் ஒருவர் தொடுத்துள்ள 5 ரிட் மனுக்களும் அடங்கும்.

இந்த மனுக்களை கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய வழக்கங்களை மிகவும் முக்கியமான பிரச்னைகள் என்றும், இதுகுறித்த மனுக்களை மே மாதம் 11-ஆம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நாஸீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை நடத்துகிறது. இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் 5 நீதிபதிகளும், சீக்கிய, கிறிஸ்தவ, பார்சி, ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கில் விரைந்து தீர்வு காண வசதியாக, விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களிலும் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு விசாரணையின்போது, அரசமைப்புச் சட்டத்தின்படி நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் இருப்பது தெரியவரும்பட்சத்தில், அதில் எந்த அளவுக்கு நீதிமன்றம் தலையிட முடியும்? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த நடைமுறைகள் தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்படுவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அப்போது இந்த நடைமுறைகள் அனைத்தும், புனித குரான் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஆதலால் அந்த நடைமுறைகள் சரியானவைதானா? என்று ஆய்வு செய்ய முடியாது என்று குறிப்பிட்டிருந்தது.

அதேநேரத்தில், மத்திய அரசு தரப்பில், இந்த நடைமுறைகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், முதல் நாள் விசாரணையின் போது பலதார மணம் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com