பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசா: கடும் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குல்பூஷண் ஜாதவ் விவகாரம், இந்திய ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது: உள்நாட்டு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசா நடைமுறைகளில் சில நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த மருத்துவ விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிகிச்சைப் பெற விரும்பும் பாகிஸ்தானியர்கள், சர்தாஜ் அஜீஸின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிய பரிந்துரைக் கடிதம் அளிப்போருக்கு எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக மருத்துவ விசா வழங்கப்படும். பாகிஸ்தானிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வருவோரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் கோபால் பாக்லே.
முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது; ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் எல்லைப் படையினர் துண்டித்தது உள்ளிட்ட விவகாரங்களால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்திருக்கும் சூழலில், இந்தியாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com