வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உலக நிபுணர்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உலக அளவிலான நிபுணர்கள் முன்னிலையில் நிரூபிக்குமாறு இரண்டு சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்தை
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உலக நிபுணர்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உலக அளவிலான நிபுணர்கள் முன்னிலையில் நிரூபிக்குமாறு இரண்டு சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தம்மை காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்று கூறும் தெஹ்சீன் பூனாவாலா, 'எலக்ஷன் வாட்ச்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.வி.ராவ் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு 21 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பதில் கோரியுள்ளனர். அவர்கள் இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில வழிகளில் முறைகேடு செய்யலாம். அவ்வாறு இந்தக் கருத்தைக் கூறுபவர்களிடம் 'எங்கள் முன் அதை நிரூபித்துக் காட்ட முடியுமா?' என்று தேர்தல் ஆணையம் சவால் விடுக்கிறது. அதேசமயத்தில், இந்தச் சவாலை சர்வதேச அளவில் இணையதளங்களை முடக்குவோர், சர்வதேச செய்தியாளர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் விடுக்காதது ஏன்? அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கவே வாய்ப்பில்லை என்றால் அது மிகவும் நல்லது. ஆனால், அவற்றில் முறைகேடுகளைச் செய்ய முடியும் என்றால் அது உலகளாவிய நிபுணர்கள் முன் வெளிப்பட்டு விடும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் மகாராஷ்டிரத்தின் புணே நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகராட்சித் தேர்தலின் முடிவுகளில் இருந்து எழுந்தவையாகும். அத்தேர்தலில், அங்குள்ள 160 வார்டுகளில் 41 வார்டுகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. மேலும், புணேவைச் சேர்ந்த வர்த்தகரும், பாஜக எம்.பி.யாக இருப்பவருமான ஒருவர் இந்த நகராட்சித் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே மிகவும் துல்லியமாகக் கணித்தார். அது எப்படி சாத்தியமானது?
தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் பொருந்தி வரவில்லை என்றால் அது நிச்சயமாக ஜனநாயகத்தில் ஒரு பிரச்னைதான். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உணர்த்தும் ஒப்புகைச்சீட்டு நடைமுறை கொண்டுவரப்பட்டால் மட்டும் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதியாகி விடாது.
எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் 50 சதவீதத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பி சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களையும், தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களையும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 12-ஆம் தேதி நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்க தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்?
கடந்த 2010-ஆம் ஆண்டிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பது அம்பலமாகி விட்டது. அதனால்தான் ஒப்புகைச்சீட்டைப் பயன்படுத்தும் நடைமுறையே அமலுக்கு வந்தது. அப்படியிருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்ற கருத்தை தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?
உச்ச நீதிமன்றம் கடந்த 2013-இல் உத்தரவிட்டிருந்தும் கூட, ஒவ்வொரு தேர்தலிலும் ஒப்புகைச்சீட்டுகளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தாதது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
போராட்டம் நடத்த ஆம் ஆத்மி முடிவு: இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்ய முடியும் என்று தில்லி மாநில ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. அக்கட்சி எம்எல்ஏவான சௌரவ் பரத்வாஜ் இது தொடர்பாக தில்லி பேரவையில் ஒரு செயல்முறை விளக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்திக் காட்டினார். இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் சாதனத்துடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் தேர்தல் ஆணையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com