"தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கட்டிய கழிப்பறைகள் களவு போனது: காவல்நிலையத்தில் புகார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கள் வீட்டில் இருந்த கழிப்பறைகள் காணாமல் போனதாக ஒரு தாயும், அவரது மகளும் காவல் நிலையத்தில் புகார்
"தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கட்டிய கழிப்பறைகள் களவு போனது: காவல்நிலையத்தில் புகார்

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கள் வீட்டில் இருந்த கழிப்பறைகள் காணாமல் போனதாக ஒரு தாயும், அவரது மகளும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள அமர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிலா பாய் படேல் (75), அவரது மகள் சாந்தா (45) ஆகிய இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அண்மையில் புகார் கொடுத்தனர்.

அதில், காணாமல் போன தங்கள் வீட்டுக் கழிப்பறைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும், அவற்றைத் திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல் நிலைய அதிகாரி இஷாக் கால்கோ கூறியதாவது:
பிலா பாய் படேல், அவரது மகள் சாந்தா ஆகிய இருவரும் கணவரை இழந்தவர்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் இருவரும் "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் தங்களது வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரக் கோரி, கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் கடந்த 2015-16-ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் இருந்து விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் கழிப்பறைகள் கட்டித் தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கி விட்டது.

விண்ணப்பித்து ஓராண்டாகியும், கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்படாததால், பிலா பாய் படேலும், சந்தாவும் கடந்த மாதம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் வீட்டுக் கழிப்பறைகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் பதிலளித்தால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் என்றார் அந்த காவல் நிலைய அதிகாரி.

இதனிடையே, சுரேந்திரா படேல் என்ற சமூக ஆர்வலர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு, அமர்பூர் கிராமத்தில் இருந்து விண்ணப்பித்த அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. அதற்கான தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது என்று அவருக்கு பதில் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக, அவர் கூறுகையில், கழிப்பறைகள் அனைத்தும் ஏட்டில் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டிக் கொடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com