ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக  விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்.
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்.

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது தெற்காசிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்

தெற்காசிய நாடுகளுக்கான தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-9 செயற்கைக்கோளை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலை நிறுத்தியது.

தெற்காசிய நாடுகளுக்கான தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-9 செயற்கைக்கோளை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலை நிறுத்தியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 4.57 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் மூலம் அந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்தனர். 2,230 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட இருந்தால் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும்.
தொலைத்தொடர்பு சேவை, தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு, மருத்துவம், கல்வி தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும் இந்த செயற்கைக்கோளின் முக்கியப் பயன்பாடாகும்.
பிரதமர் மோடி பாராட்டு: ஜிசாட்-9 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக ஏவியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் கூறியிருப்பதாவது:
தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய நாடுகளிடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காகவும், அனைவரும் பலன் பெறும் வகையிலும் செயற்கைக்கோள் ஒன்று ஏவப்படும் என்று மோடி அறிவித்திருந்தார். இதற்கு முதலில் "சார்க்' செயற்கைக்கோள் என்று பெயரிடப்பட்டது. ஆனால், இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்து விட்டது. இதனையடுத்து, தெற்காசிய செயற்கைக்கோள் என்று அதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தெற்காசியப் பகுதி நாடுகளிடையே வலுவான தகவல் தொடர்பைக் கட்டமைப்பதே இந்த செயற்கைக்கோளின் அடிப்படை நோக்கம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயற்கைக்கோளைத் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இந்த செயற்கைக்கோளை, இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பமான நவீன கிரையோஜெனிக் என்ஜின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி வகையில் இது போன்று கிரையோஜெனிக் என்ஜின் மூலம் வடிவமைக்கப்படுவது இது 4-ஆவது முறையாகும். ஒட்டுமொத்தமாக இதுவரை 11 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்-9 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான 28 மணி நேர கவுன்ட்டவுன் வியாழக்கிழமை பகல் 12.57 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து விஞ்ஞானிகள் இதனுடைய செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கவுன்ட்டவுன் முடிந்து வெள்ளிக்கிழமை மாலை 4.57 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com