ரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலுக்கு எடுபடமாட்டார்: அன்புமணி குற்றச்சாட்டு!

நடிகர் ரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும் அரசிலுக்கு அவர் எடுபடமாட்டார் என பாமக இளைஞரணி தலைவரும் மக்களவை
ரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலுக்கு எடுபடமாட்டார்: அன்புமணி குற்றச்சாட்டு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும் அரசிலுக்கு அவர் எடுபடமாட்டார் என பாமக இளைஞரணி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த 12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை சந்தித்தார். இன்று முதல் 5 நாட்களுக்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

2007 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.

தேர்வு செய்யப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் பிரவேசம் பற்றி தன்னுடைய நிலைப்பாட்டை தனது ரசிகர்கள் முன் விளக்கினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. நான் அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; அரசியல் மூலமாக பணம் சம்பாதிக்க எனது ரசிகர்களை விட மாட்டேன்.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது.நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள்.இன்று நடிகனாக இருக்கிறேன், நாளை என்னவாக இருப்பேன் என தெரியாது ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பாமக நிர்வாகியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணியிடம் செய்தியாளர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், திரைத்துறையினர் தமிழகத்தை ஆட்சி செய்தது போதும். கடந்த 40 ஆண்டுகளாக திரைத்துறையினர் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அதேபோன்று நடிகர்களுக்கு டூப் போடத்தான் தெரியும் அரசியலில் எடுபட மாட்டார்கள். இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல், புலி வருது புலி வருதுனு சொல்வது போன்று உள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது.

அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாகவும், கமல் ஒரு தைரியமான நபர் என்று அன்புமணி கூறினார்.

ரஜினி மற்றும் கமலின் அரசியல் நிலைப்பாட்டை அன்புமணி விமர்சித்துள்ளது தமிழக அரசியல் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com