சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுதில்லி: சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7.45 மணி முதல் 9 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தில்லி, நொய்டா, காரைக்குடி ஆகிய இடங்களில் ப.சிதம்பரத்துக்கு சொந்தமான 14 இடங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அனுமதியளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது மற்றும் தனது மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நடத்தி வரும் அதிரடி சோதனை குறித்து சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய சிதம்பரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அனுமதியும் சட்டத்திற்கு உட்பட்டு, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் 5 செயலாளர்களின் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். இதில் எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லை

மேலும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது 5 அமைச்சகங்களை தொடர்புடையது எனவும் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னையும், தனது மகனையும் அவரது நண்பர்களை குறி வைத்தே சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தெரிவித்த சிதம்பரம், என்னுடைய எழுத்துகளை நிறுத்துவதுமே மத்திய அரசின் இலக்கு.

இதேபோன்றதொரு முயற்சிகளை தான் எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது மத்திய அரசு மேற்கொள்கிறது. ஆனால், என்னுடைய குரலையும், எழுத்துக்களையும் ஒடுக்க முடியாது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com