வாழ்வாதார நதிகள் வறண்டு வரும் அவலம்! பிரதமர் மோடி கவலை

நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் பெரும்பாலான நதிகள் நீரின்றி வறண்டு காட்சியளிக்கின்றன என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் அமர்கண்டக் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நர்மதை நதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர்.
மத்தியப் பிரதேச மாநிலம் அமர்கண்டக் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நர்மதை நதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர்.

நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் பெரும்பாலான நதிகள் நீரின்றி வறண்டு காட்சியளிக்கின்றன என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அவற்றை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நர்மதை நதியைப் பாதுகாப்பதற்கான பிரசார விழிப்புணர்வு யாத்திரை ("நமாமி தேவி நர்மதே சேவா யாத்ரா') கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் முன்னெடுத்த இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நர்மதை நதி வழித் தடம் முழுவதையும் பாதுகாப்பதற்கான செயல்திட்டமும் வகுக்கப்பட்டது.
அந்தச் செயல்திட்டம் பிரதமர் மோடியின் பரிசீலனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. 1,312 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாயும் நர்மதை நதி, குஜராத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் சுமார் 3,344 கிலோ மீட்டர் தொலைவிலான விழிப்புணர்வு யாத்திரையின் நிறைவு விழா, மத்தியப் பிரதேச மாநிலம் அமர்கண்டக் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நர்மதை நதியைப் போற்றி நடத்தப்பட்ட சிறப்புப் பூஜையில் பங்கேற்றார். அதன் பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நர்மதையைப் பாதுகாப்பதற்காக மத்தியப் பிரதேச அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை. இதற்காக அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதுதொடர்பாக ஒரு செயல்திட்டத்தையும் மத்தியப் பிரதேச அரசு வகுத்துள்ளது. என்னுடைய பார்வைக்காக அனுப்பிவைக்கப்பட்ட அந்தத் திட்டத்தை நான் முழுமையாக படித்துப் பார்த்தேன். எதிர்கால நோக்கம் கொண்ட ஆகச் சிறந்த ஆவணமாக அது இருந்தது.
நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற பல செயல்திட்டங்களை வகுக்குமாறு, பிற
மாநிலங்களிடமும் மத்தியப் பிரதேசம் கேட்டுக் கொள்ள வேண்டும். நர்மதை நதியின் மகத்துவம் என்னவென்று குஜராத் மண்ணில் இருந்து வந்த எனக்கு நன்றாகத் தெரியும். அந்த நதியின் ஒவ்வொரு துளி நீரும் குஜராத்துக்கு இன்றியமையாத சொத்து. அதனைப் பேணிக் காக்க வேண்டும்.
நம் நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் பல நதிகள் எட்டுத் திக்கிலும் கிளைபரப்பிப் பாய்கின்றன. ஆனால், நிஜத்தில் பல நதிகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. அவற்றை மீட்டெடுக்க சரியான செயல் திட்டம் வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com