கோபமாக இருக்கும் சாமியை சமாதானப்படுத்த ஏரியை உடைத்து நீரை வெளியேற்றிய கிராம மக்கள்!    

கோபமாக இருக்கும் சாமியை சமாதானப்படுத்த ஏரியை உடைத்து நீரை வெளியேற்றிய கிராம மக்கள்!    

கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், கோபமாக இருக்கும் ஊர் சாமியை சமாதானப்படுத்த வேண்டி...

ஹப்பாலி(கர்நாடகா): கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், கோபமாக இருக்கும் ஊர் சாமியை சமாதானப்படுத்த வேண்டி, நீர் நிரம்பியிருந்த  ஏரியை உடைத்து மக்கள் நீரை வெளியேற்றிய வினோதம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கோட்டூர் தாலுகாவில் உள்ளது பல்லாரி கிராமம். இங்கு ராமதுர்கா ஏரி உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இங்கு போதிய அளவு மழை இல்லாவிட்டாலும், ஏரியில் நீர்வரத்து கணிசமான அளவு இருந்ததால் ஏரி நிரம்பியிருந்தது.ஆனால் இந்த நீரை விவசாய பணிகளுக்கு மக்கள் பயன்படுத்துவது இல்லை.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அங்கு மழை பெய்ததன் காரணமாக, ஏரியில் நீர் நிரம்பி இருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எப்பொழுதும் போல ஏரிக்கு வந்த பக்கத்து ஊர் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால் ஏரியில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மீன்கள் வெறும் தரையில் கிடைக்கும் அளவுக்கு,   ஏரி ஏறக்குறைய வெறுமையாக  காட்சியளித்தது. இதனால் அதிர்ச்சியான அவர்கள் விசாரித்த பொழுதுதான், ஊர் இளைஞர்கள் சிலர் ஏரி நீரை வெளியற்றியது தெரிய வந்தது.

அவர்களிடம் சென்று விசாரித்த பொழுதுதான் கோபத்தில் இருக்கும் ஊர் தெய்வத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு இப்படி செய்ததாக தெரிவித்தனர், மேலும் விசாரித்த பொழுது, ஏரி நிரம்பி காணப்படுவதால்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை சரியாக பெய்யவில்லை; இதன் காரணமாக ஊர் தெய்வம் கோபமாக இருக்கிறது என்று தங்களுக்கு 'தெய்வத்தின் குரல்' தெரிவித்ததாக கூறினார்.  கோபத்தை தணிக்க வேண்டுமென்றால் ஏரி நீரை வெளியேறுவது ஒன்றே வழி என்பதால் அவ்வாறு செய்ததாக தெரிவித்தனர்.

ஆனால் ஊர் மக்களில் ஒரு தரப்பினர் ஏரி நீர் வெளியேற்றப்படுவதன் பின்னணியில் மீனவ மக்கள் இருக்கக் கூடும் என்று தெரிவித்தனர். ஏரி நீர் மொத்தமாக வெளியேற்றபட்டால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று எண்ணி சிலர் இதனை செய்திருக்கலாம். ஆனால் பிரச்சினைகளை தவிர்க்க 'தெய்வத்தின் குரல்' என்று சொல்லி ஏமாற்றுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த பிரச்சினையின் ஒரே நல்ல விளைவாக நீண்ட நாட்களாக தூர் வாரப்படாமல் இருந்த இந்த ஏரியை தற்பொழுது தூர் வார மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று காலை அங்கு வந்த தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், நீரை வீணாக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதே நேரம் இந்த நடவடிக்கையின் பின்னால் ஏதேனும் சாதி ரீதியிலான காரணங்கள் உள்ளனவா என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர். முன்னதாக தாழ்த்தப்பட்ட இன மக்கள் பயன்படுத்திய நீரை பருக கூடாதுஎன்று, கிணற்று நீரை உயர் சாதி மக்கள் வெளியேறிய சம்பவங்கள் இந்தப் பகுதியில் உண்டு; இதிலும் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள தர்வாத் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட மேனிலை நீர்த்தேக்க தொட்டியானது, கிராம கோவிலில் கோபுரத்தை விட உயரமாக இருப்பதால் நீரை மக்கள் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர் அந்த தொட்டியிலி ருந்து வெளியேறும் நீரானது. முதலில் கிராம கோவில் தெய்வத்தின் மேல் அபிஷேகம் செய்த பின்னர்தான் குழாய்கள் வழியாக கிராம மக்களுக்கு கிடைப்பது போன்று அதிகாரிகள் ஏற்பாடு செய்த பின்னர்தான் நிலைமை சரியானது என்பது குறிப்பிடத்தக்கது.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com