சமீபகாலமாக ரயில் பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறக் காரணம் இதுதான்!

மிகவும் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் பேரின் உயிர் பலிக்கு காரணமாக இந்திய ரயில்வே இருப்பதாக அரசின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக ரயில் பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறக் காரணம் இதுதான்!

மிகவும் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் பேரின் உயிர் பலிக்கு காரணமாக இந்திய ரயில்வே இருப்பதாக அரசின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதிச் செயல் என்று திசை திருப்பலாம், சிக்னல் கோளாறு என்று கூட சொல்லலாம், ஆனால், ஒவ்வொரு நாளும் சுமார் 2 கோடி மக்கள் பயணிக்கும், உலகின் மிக அதிகமாக 12 ஆயிரம் ரயில்களைக் கொண்டது என்ற பெருமை பெற்ற இந்திய ரயில்வே, இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த உயிரிழப்புகள், தண்டவாளங்களைக் கடக்கும் பொதுமக்கள் மீது ரயில் மோதுவது அல்லது ரயில் தடம்புரள்வது அல்லது ரயில்கள் மோதல் போன்ற விபத்தினால் ஏற்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் பல ரயில் பாதைகள், அதன் திறனுக்கு அதிகமாக 40% ரயில் போக்குவரத்தை எதிர்கொள்வதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பாதையின் திறன் என்பது, 24 மணி நேரத்தில் ஒரு தண்டவாளத்தில் இயக்கப்படக் கூடிய ரயில்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அப்படியானால், இது நிச்சயம் பாதுகாப்பு என்பதை புறந்தள்ளிய ஒன்றுதான் என்பதை ரயில்வே அமைச்சர் வந்துதான் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. பாமரனுக்கே புரிகிறது.

1950 முதல் 2016ம் ஆண்டு வரையிலான ரயில்வேயின் புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, பயணிகள் ரயில் சேவை 1,344%மும், சரக்கு ரயில் சேவை 1,642 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ரயில் தண்டவாளங்கள் 23% அளவுக்கு மட்டுமே விரிவாக்கப்பட்டுள்ளது.

நன்றி : Scroll.in

ரயில் பாதை நீட்டிக்கப்படாமல், ரயில் சேவையை மட்டும் உயர்த்தினால், ஒரே பாதையில் அனைத்து ரயில் சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படுவதால்தான், அவ்வப்போது ரயில் தாமதம் மற்றும் ரயில் விபத்துகள் நேரிடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, தண்டவாளப் பராமரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தினாலும், ரயில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் காரணத்தால், பராமரிப்புக்குப் போதிய நேரம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு தண்டவாளத்தின் திறனைத் தாண்டி அதுவும் 40% அதிகமாக ரயில்கள் இயக்கப்படும் போது, ரயில் விபத்துக்களுக்கு அவையே காரணமாகிவிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு புதிய ரயில்களை அறிவித்துக் கொண்டே போகிறது. ஆனால், கட்டமைப்பை விரிவுபடுத்துவதில்லை. 

ஒரே தண்டவாளத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படுவதால், அதன் பராமரிப்பும் கேள்விக் குறியாகிறது. 2010ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 11 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அனைத்துமே கட்டமைப்புக் குறைபாடுதான் காரணத்தால் தான்.

இவற்றால்தான், சமீபகாலமாக ரயில் பயணம் மிகவும் ஆபத்தானதான மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் உணரும் தருணம் இது. சாலைப் போக்குவரத்தை விட, ரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என்பதால்தான், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ஆனால், சிறு தவறும், பல உயிர்களை பலிவாங்கும் என்று தெரிந்திருந்தும், வெறும் விளம்பரத்துக்காக ரயில்களை அறிவிக்கும் மத்திய அரசு, அதற்குரிய கட்டமைப்பை மேம்படுத்த தவறியிருப்பது பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் மறுசீரப்புப் பணிகளுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கியுள்ளார். இதில் இருந்தே, ரயில்வே துறையின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது. நிதியை ஒதுக்கியதோடு நின்றுவிடாமல், நிதியைக் கொண்டு பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு முன் வர வேண்டும். 

விபத்துக்களுக்குப் பிறகு, உயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதை விட, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளை தவிர்ப்பதுதான் முக்கியக் கடமை என்பதையும் உணர வேண்டும்.

எனவே, இனி வருங்காலத்தில், ரயில் பயணம் என்பது பாதுகாப்பான பயணமாக மாற மத்திய அரசு முழு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com