ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தலைமறைவு நபர்களாக அறிவிக்க தில்லி நீதிமன்றம் மறுப்பு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்தகிருஷ்ணன்,
அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல்
அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல்

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷ் ஆகியோரை தலைமறைவு நபர்களாக அறிவிக்க சிபிஐ விடுத்த கோரிக்கையை ஏற்க தில்லி சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்களுக்கான அழைப்பாணையை அனுப்ப இந்திய தூதரகங்கள் மூலம் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காத நிலையில் அவர்களை நேரில் ஆஜர்படுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராயுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது தொடர்பாக தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகிய இருவரும் மலேசிய குடியுரிமை பெற்றவர்கள். இருப்பினும், அவர்களை இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிஐ நீதிமன்றம் அனுப்பும் அழைப்பாணையை அவர்களுக்கு வழங்க இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பலன் கொடுக்கவில்லை. பரஸ்பரம் சட்ட உதவிகள் ஒப்பந்தத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவருக்கும் அழைப்பாணையை வழங்க இந்தியா முயற்சி எடுத்தபோது, அந்த ஒப்பந்தத்தின் வாய்ப்பை இந்த விவகாரத்தில் பயன்படுத்த முடியாது என்று மலேசியா அரசு கூறி விட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மட்டுமின்றி 'அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க்ஸ்', 'மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்' ஆகிய இரு மலேசிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவற்றுக்கான அழைப்பாணையை வழங்கவும் மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை. இத்தகைய சூழலில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருந்து அழைப்பாணைகள் அனுப்புவதால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என நீதிமன்றம் கருதுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் யாராவது கைது செய்யப்பட்டாலோ அல்லது அவர்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராக முன்வந்தாலோ இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. எனவே, அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலை தலைமறைவு நபர்களாக அறிவிக்க சிபிஐ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது.
அதே சமயம், குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேறு வழிமுறையை ஆராய சிபிஐக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும்வரை வழக்கின் கோப்பு நீதிமன்ற காப்பக அறையில் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
அதே சமயம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டவர்களான அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதான வழக்கை தனியாக விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முகாந்திரம் எழவில்லை எனக் கூறி அவர்களை வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் விடுவித்தது. இந்நிலையில் மலேசிய குடியுரிமை பெற்றுள்ள அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதான வழக்கும் நிலுவையில் வைத்திருக்க சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com