குல்பூஷண் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு வெற்றி:தலைவர்கள் கருத்து

பாகிஸ்தானில் இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மும்பையில் கொண்டாடும் நண்பர்கள்.
குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மும்பையில் கொண்டாடும் நண்பர்கள்.

பாகிஸ்தானில் இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் தங்கள் நாட்டில் அத்துமீறி நுழைந்ததாகவும், உளவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி அவரைக் கைது செய்தது. குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களை நிறைவேற்ற குல்பூஷண் சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான 'குற்றச்சாட்டுகளை' விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதித்தது.
இந்தியா கண்டனம்: இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, குல்பூஷண் ஜாதவ் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்றும் குற்றம்சாட்டியது. குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. அதை ஏற்ற நீதிமன்றம், மேற்கண்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து, இந்தியாவின் மனு சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே முன்வைத்த வாதம் வருமாறு:
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுக் காவலில் குல்பூஷண் ஜாதவ் இருந்தபோது அவரிடம் இருந்து கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா வாதிட்டது.
இந்தியத் தரப்பு வாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் இந்தியா மனுத் தாக்கல் செய்துள்ளது தேவையற்றது' என்று பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு எதிராக இந்தியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
அப்போது, பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைத்து 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமனதாக உத்தரவிட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரானி ஆப்ரஹாம் உத்தரவை வாசித்தார். அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு (2017) ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்று பாகிஸ்தான் சூசகமாகத் தெரிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு எந்த நேரமும் அவர் தூக்கிலிடப்படும் அபாயம் உள்ளது என்பதே அர்த்தமாகும். அதாவது இவ்வழக்கில் இந்த நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு அவர் தூக்கிலிடப்படலாம் என்பதே அதன் உட்பொருளாகும்.
இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜாதவ் தூக்கிலிடப்பட மாட்டார் என்ற உறுதிமொழியை பாகிஸ்தான் அளிக்கவில்லை. எனவே இதன் அவசரத்தன்மையை உணர முடிகிறது.
எனவே, இந்த வழக்கில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தற்போதைய உத்தரவை அமல்படுத்துவதற்கு தாம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் இந்த நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ரானி ஆப்ரஹாம் தனது உத்தரவில் தெரிவித்தார்.
இந்தியா வரவேற்பு: குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த உத்தரவை இந்தியத் தலைவர்கள் வரவேற்றுள்ளதோடு 'இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானதும், பிரதமர் நரேந்திர மோடி திருப்தி தெரிவித்ததோடு, இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேசினார். இந்த உத்தரவு மிகப்பெரும் ஆறுதலை அளித்திருப்பதாக சுஷ்மா கூறினார். இவ்வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்களுக்குத் தலைமை தாங்கி வாதங்களை முன்வைத்த மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வேவுக்கு மோடியும், சுஷ்மாவும் நன்றி தெரிவித்தனர்.
நண்பர்கள் கொண்டாட்டம்: அதேபோல், மும்பையில் உள்ள குல்பூஷண் ஜாதவின் நண்பர்களும் அவரது நலம் விரும்பிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ளனர். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அவரது நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக வரவேற்பு
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று பாஜக தலைவர் அமித் ஷா கருத்து கூறுகையில், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகப்பெரிய ஆறுதலை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பாராட்டு
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரவை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், தங்களது தேசியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா கூறியதாவது:
குல்பூஷண் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதன் மூலம் இந்தியா தனது உண்மையான முகத்தை மறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. எனினும், இந்தியாவின் உண்மையான முகம் உலகத்தின் முன் அம்பலப்படுத்தப்படும்.
குல்பூஷண் சதிச்செயல், பயங்கரவாதம் உள்ளிட்ட தனது குற்றங்களை ஒருமுறை அல்ல - இரு முறை ஒப்புக் கொண்டுள்ளார். எங்களின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அந்த நீதிமன்றத்திடம் பாகிஸ்தான் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்திய உளவாளியான குல்பூஷணுக்கு எதிரான வலுவான ஆதாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் சமர்ப்பிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com