அடுத்த ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி: மத்திய அரசு தகவல்

அடுத்த ஆண்டுக்குள் (2018) அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் (2018) அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் மின்வசதி, மேம்பாடு, மின்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்ற ஆன்லைன் விவாத நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதம் சென்னையிலுள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில்(பிஐபி) நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதையொட்டி மத்திய மின்துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை விவரம்:
கடந்த 2014 ஆண்டிலிருந்து தீன்தயாள் உபாத்யாயா கிராம மின் வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் 2018 ஆண்டுக்குள் மின்வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 18,542 கிராமங்களில் 13,469 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அவ்வகையில், இந்த மின்வசதி திட்டத்தின் மூலம் 5 மடங்கு அதிகமாக கிராமப்புற பகுதிகளில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதுபோல், மாநிலங்களுக்கு இருமடங்காக, ரூ.7965 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.42,553 கோடி மதிப்பிலான மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 2.56 கோடி குடும்பங்கள் இலவச மின்வசதி பெற்று பயனடைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கூடுதல் கவனம்: முன்னதாக நடைபெற்ற ஆன்லைன் விவாதத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: அணுசக்தி மூலம் உள்நாட்டுத் தேவைக்கு 7 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி பெறுவதற்கு அண்மையில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 370 சதவீதம் அளவுக்கு சூரிய ஒளியிலிருந்து எரிசக்தி பெறப்பட்டுள்ளது. அதுபோல், கடந்த ஆண்டில் 5,400 மெகாவாட் அளவுக்கு காற்றாலையிலிருந்து மின் தேவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அதுபோல், அதிக திட்டங்களை செயல்படுத்தவும் முனைப்பாக உள்ளது. இதுபோன்ற நவீன திட்டங்களால், எரிசக்தி பயன்பாட்டு விலையும் குறையும். எரிசக்தி தேவையும் பூர்த்தி அடையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com