ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பாக விதிக்கப்பட்ட காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு, நீட்டிக்கப்பட மாட்டாது

பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பாக விதிக்கப்பட்ட காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு, நீட்டிக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் சாந்தா சின்ஹா, கல்யாணி மேனன் சென் ஆகியோர் சார்பில் மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், சமூகநலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு இடைக்கால நிவாரணம் (கால அவகாசம்) அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதாடியபோது, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பிறப்பித்த உத்தரவில், ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறுகையில், 'நாட்டு மக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அவர்களை கட்டுப்படுத்தவும் ஆதார் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது' என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, 'இடைக்கால நிவாரணம் கோரி ஏற்கெனவே மனு தொடுத்திருக்கும் நிலையில், 2-ஆவது முறையாக ஏன் நீங்கள் மனு தொடுத்துள்ளீர்கள்' எனக் கேட்டனர். இதற்கு திவான் பதிலளிக்கையில், 'இடைக்கால நிவாரணம் கோரி தொடுக்கப்பட்டுள்ள மனுவை, வழக்குகளின் பட்டியலில் உச்ச நீதிமன்ற பதிவுத் துறை பட்டியலிடவில்லை' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், 'உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, 5 நீதிபதிகள் அமர்வு ஆகியவை முன்பு இதுதொடர்பாக உத்தரவிடவில்லையா?' என்றனர். அதற்கு திவான், 'அந்த உத்தரவுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அரசுத் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி மறுப்புத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்துக்கு எதிராக யாரும் உத்தரவிடவில்லை. சட்டமியற்றக் கூடாது என்று நாடாளுமன்றத்தை நான் கேட்கவும் முடியாது. நாடு முழுவதும் இதுவரையிலும் 115 கோடி ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் திட்டத்தின் நோக்கமே, சமூகநலத் திட்டங்களின் பயன்கள் அடையாளம் தெரியாத நபர்களுக்கு செல்லக் கூடாது என்பதே ஆகும்.
ஜூன் 30-ஆம் தேதி வரையிலும் ஆதார் வாங்காத நபர்கள், அதற்காக தங்கள் விவரத்தை பதிவு செய்யலாம். அப்போது அளிக்கப்படும் உறுதிச் சீட்டுகளை சமூகநலத் திட்டங்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம் என்றார் ரோத்தகி.
இதற்கு ஷியாம் திவான் கூறுகையில், 'இதை உடனடி விவகாரமாக கருதி விசாரிக்க வேண்டும். ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னதாக, இதை விசாரிக்க முடியவில்லையெனில், காலக்கெடுவை அவர்கள் (மத்திய அரசு) நீட்டிக்க வேண்டும்' என்றார்.
அப்போது முகுல் ரோத்தகி, 'காலக்கெடுவை நீட்டிக்கும் பேச்சுக்கே இடமில்லை' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இடைக்கால நிவாரணம் கோரும் அனைத்து மனுக்களையும், இந்த அமர்வு முன்னிலையில் ஜூன் 27-ஆம் தேதி பட்டியலிட வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு தனது பதிலை 3 வாரங்களில் தெரிவிக்க வேண்டும்' என்றனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com