கருப்புப் பண மோசடி: தில்லி சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.8,000 கோடி கருப்புப் பணத்தை மாற்ற முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.8,000 கோடி கருப்புப் பணத்தை மாற்ற முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், அவர்களுக்குச் சொந்தமான ரூ.1.12 கோடி மதிப்புடைய விவசாய நிலமும் முடக்கப்பட்டது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு நூதன வழிகளில் கருப்புப் பணத்தை மாற்றும் செயல்கள் அதிகரித்தன. அவற்றைத் தடுக்க மத்திய அரசு பல கடிவாளங்களைப் போட்டபோதிலும், அதனையும் மீறி சட்டவிரோதமாக பணம் மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
இதையடுத்து வருமான வரித் துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் நாடு முழுவதிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிச்சத்துக்கு வந்தது. பலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வரிசையில், தில்லியைச் சேர்ந்த சுரேந்திர ஜெயின், வீரேந்திர ஜெயின் ஆகிய சகோதரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 90-க்கும் அதிகமான போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் வாயிலாக அவர்கள் இருவரும் கருப்புப் பணத்தை மாற்றியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சொந்தமான ரூ.65.82 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், ஜெயின் சகோதரர்களுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும், அவர்களுக்குச் சொந்தமான 1.12 கோடி மதிப்புடைய விவசாய நிலத்தையும் தற்போது முடக்கியிருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com