கூடங்குளம் 5, 6வது அணு உலை விவகாரம்: ஊடகத் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுடன் என்எஸ்ஜி விவகாரத்தை தொடர்புபடுத்தி

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுடன் என்எஸ்ஜி விவகாரத்தை தொடர்புபடுத்தி வெளியான ஊடகத் தகவலில் உண்மையில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய ஒத்துழைப்புடன் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பொது செயல்திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சகங்கள் இடையேயான குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இதையடுத்து, இந்த ஒப்பந்தம் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியிலேயே கையெழுத்தாக வேண்டிய இந்த ஒப்பந்தம், பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருப்பதாக ஊடகமொன்றில் அண்மையில் செய்தி வெளியானது. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இடம்பெறுவதற்கு, ரஷியா வலுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்ப்பார்ப்பதாகவும் இதுவே கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் தாமதமாவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுடன் என்எஸ்ஜி விவகாரத்தை தொடர்புபடுத்தி வெளியான ஊடகத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அடிப்படையற்றவை.
கூடங்குளம் ஒப்பந்தம் குறித்து ரஷியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் உள்நாட்டு அளவில் ஒப்புதல் வழங்கக் கூடிய நிலையில் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com