சீனாவுடன் எல்லை நிலவரம்: ராஜ்நாத் தலைமையில் இன்று 5 மாநில முதல்வர்கள் கூட்டம்

சீனாவுடனான நமது எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்

சீனாவுடனான நமது எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய 5 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இமய மலையையொட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கூட்டத்தில் இந்திய-சீன எல்லைப் பாதுகாப்பு, எல்லைப்புற பிரதேசங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மத்திய அரசுக்கும் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இடையில் ஒட்டுமொத்த எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்டை நாடான சீனா, இந்தியாவுடனான தனது எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள், ரயில் வழித்தடம், விமான நிலையங்கள் ஆகியவற்றை அமைத்துள்ளதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. இந்தியா 3,488 கி.மீ. நீள எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. 'ஒரே மண்டலம், ஒரே பாதை' திட்டம் தொடர்பாக சீனா நடத்திய மாநாட்டை இந்தியா புறக்கணித்த சில தினங்களுக்குப் பின் மேற்கண்ட கூட்டத்தை மத்திய அரசு நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com