ஜிஎஸ்டி: மருத்துவம், கல்விச் சேவைகளுக்கு வரி விலக்கு: சேவை வரிகளுக்கு இறுதி வடிவம்

மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்று சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். உடன் நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். உடன் நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார்

மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்று சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்டது. மேலும், பல்வேறு சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற நான்கு விகிதங்களில் வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நாட்டில் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமலாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 80 முதல் 90 சதவீதம் வரையிலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நான்கு விதமான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களில், அன்றாடம் பயன்படும் அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து கூட்டத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் கல்வித் துறைகள் சார்ந்த சேவைகளுக்கு வரிவிலக்கு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கனரக பைக்குகளுக்கு 31 சதவீத வரி: 350 சிசி என்ஜின் திறன் கொண்ட கனரக பைக்குகள், சிறிய படகுகளுக்கான சேவைக் கட்டணம், தனியார் ஜெட் விமானங்களுக்கான சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்கு 31 சதவீத வரி விதிப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
அனைத்து விதமான கார்கள், பேருந்துகள், லாரிகள், மொபட் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள், சொகுசுப் படகுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கத் தீர்மானிக்கப்பட்டது. 1500 சிசி திறனை விடக் குறைந்த திறனுடன் கூடிய என்ஜின் கொண்ட சிறிய ரக டீசல் கார்கள் மீது 3 சதவீத செஸ் வரி விதிக்கப்பட உள்ளது.
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் மீது 12 சதவீத வரியும், பான் மசாலா குட்கா மீது 204 சதவீத வரியும் விதிக்கப்பட உள்ளது. புகையிலைப் பொருள்கள் மீது 71 முதல் 204 சதவீத வரியும், ஜர்தா மீது 160 சதவீத வரியும் விதிக்கப்படும்.
ஃபில்டர் மற்றும் ஃபில்டர் இல்லாத சிகரெட்டுகள் மீது 5 சதவீத வரியும், 1000 சிகரெட்டுகளுக்குத் தனியாக ரூ.1591 ரூபாயும் வரியாக விதிக்கப்பட உள்ளது.
போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஓலா, உபேர் ஆகிய கால் டாக்ஸி சேவைகளுக்கும் இது பொருந்தும். இப்போது 6 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி-யில் ஒரு சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. ரயில் டிக்கெட்டுகளுக்கு 5 சதவீத சேவை வரி உண்டு. சாதாரண வகுப்பு பெட்டிகளுக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ, உள்ளூர் ரயில், ஹஜ் உள்ளிட்ட புனித யாத்திரைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் சாதாரண வகுப்புக்கு 5 சதவீதமும், சிறப்பு வகுப்புக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி உண்டு.
ஏ.சி. வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவீத வரி, ஏ.சி. வசதி கொண்ட உணவகங்கள், மதுபான உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 18 சதவீத வரி, 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும்.
கேளிக்கை வரியும், சேவை வரியும் இணைக்கப்பட்டு, திரைப்படம், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளுக்கு மாநிலங்கள் கூடுதல் வரி விதிக்க முடியும். லாட்டரிச் சீட்டுகளுக்கு வரி கிடையாது.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு கட்டணம் ரூ.1,000, அதற்குக் குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி வரி கிடையாது. ஒருநாள் தங்குவதற்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு 12 சதவீதமும், ஒருநாளுக்கு ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் இருந்தால் வரி 28 சதவீதமாகும்.
இது குறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பொருள்களைப் போலவே சேவைகளுக்கும் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. எனினும், தங்கத்தின் மீதான வரி விகிதங்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் மீண்டும் அடுத்த மாதம் (ஜூன் ) 3-ஆம் தேதி கூடவுள்ளது' என்றார்.
விலை குறையும் பொருள்கள்: முன்னதாக, பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் மீதான வரியைக் குறைக்க வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
குறிப்பாக, பால் மற்றும் தயிருக்கு வரிவிலக்கு அளிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அரிசி, கோதுமை, காபித் தூள், தேயிலை, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவற்றின் மீது குறைந்தபட்ச வரி விதிப்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு அப்பொருள்களின் விலை கணிசமாகக் குறையக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com