நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: ஹெச்.சி. குப்தா குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: ஹெச்.சி. குப்தா குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தாவை குற்றவாளி என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தாவை குற்றவாளி என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுதொடர்பான வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஸர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஹெச்.சி. குப்தா, நிலக்கரித் துறை முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். க்ரோபா, முன்னாள் இயக்குநர் கே.சி. சமாரியா ஆகியோர் குற்றவாளிகள் ஆவர். அதேபோல், கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் பவன் குமார் அலுவாலியா ஆகியோரும் குற்றவாளிகள் ஆவர். அதேநேரத்தில், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அமித் கோயல் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நபர்களுக்கான தண்டனை விவரம் தொடர்பான உத்தரவு வரும் வரும் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி பரத் பராசர் அறிவித்தார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு சுமார் ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ருத்ராபுரி நிலக்கரிச் சுரங்கம், கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஹெச்.சி. குப்தா, க்ரோபா, சமாரியா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஹெச்.சி. குப்தா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹெச்.சி. குப்தாவுக்கு எதிராக 8 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனித்தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com