மணல் கொள்ளையை தடுக்க முயன்ற 3 பேர் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கட்வா மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது நிகழ்ந்த தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், கட்வா மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது நிகழ்ந்த தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக, மணல் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, பலாமு மாவட்ட காவல்துறை டிஐஜி விபுல் சுக்லா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
மேதினிநகரை அடுத்த சம்ஷான் காட் பகுதி அருகே மணல் அள்ளும் ஒப்பந்ததாரர் ஒருவர் அனுமதியின்றி மணலை அள்ளிக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை நோக்கி ஒப்பந்ததாரரின் உதவியாளர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் உதய் யாதவ் (55), அவரது இரு மகன்கள் நிரஞ்ஜன் (35) மற்றும் விமலேஷ் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த கிராம மக்கள் ஒப்பந்ததாரரின் இல்லத்துக்குச் சென்று அவரைத் தேடினர். அங்கு அவர் இல்லாததையடுத்து, அவருடைய உதவியாளரை வெளியே இழுத்து வந்தனர். பின்னர், அவரை அடித்தே கொன்றனர்.
ஆத்திரம் தீராத வேறு சிலர், அங்கிருந்த 15 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஒன்றை தீயிட்டுக் கொளுத்தினர்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்வா காவல்துறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷிணி அலோக் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறார் என்றார் விபுல் சுக்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com