மாறன் சகோதரர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு முன்னாள் மத்திய

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை: இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை சார்பில் கடந்த 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கர்க் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து விட்ட சில முக்கிய அம்சங்கள் என்ன என்பதை பட்டியலிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.பி.கர்க் பிறப்பித்த உத்தரவில், 'குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன மேலாண் இயக்குநர் கே.சண்முகம் மற்றும் சௌத் ஏசியா எஃப்எம், சன் டைரக்ட் டிவி ஆகிய நிறுவனங்கள் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் அமலாக்கத் துறை மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று குறிப்பிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம் வருமாறு: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை கோடிக்கணக்கில் நடந்ததால் இந்த வழக்கை மத்திய அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன மேலாண் இயக்குநர் கே.சண்முகம் மற்றும் சன் டைரக்ட் டிவி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதே விவகாரத்தில் சிபிஐயும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
விடுவிப்பு: இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, வழக்கை நடத்துவதற்கான முகாந்திரத்தை கொண்டிருக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்த வழக்கில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக செயல்பட்ட நடவடிக்கை, மாறன் குடும்பத்தினர் (தயாநிதி, கலாநிதி, காவேரி) சட்டவிரோதமாக அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சட்டவிரோத முதலீடுகளைப் பெற்ற செயல்களின் தன்மையை பரிசீலிக்க விசாரணை நீதிமன்றம் தவறி விட்டது.
அதிகாரம் உள்ளது: குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும் அதே சமயம், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இழைத்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செயலை விசாரணைக்கு உள்படுத்தாமல் குற்றம்சாட்டப்பவர்களை வழக்கில் இருந்து விடுவித்த சிபிஐ நீதிமன்றத்தின் அணுகுமுறை சரியல்ல. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்ட விதிகளை மீறும் நிறுவனங்கள், அதன் பங்குதாரர்கள் மீது அச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய அமலாக்கத் துறைக்கு உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து தில்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com