மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: சவாலை எதிர்கொள்வதற்கான தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற புகாரை நிரூபிப்பதற்கான சவாலை எதிர்கொள்வதற்கான தேதியை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே 20) அறிவிக்கவுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: சவாலை எதிர்கொள்வதற்கான தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற புகாரை நிரூபிப்பதற்கான சவாலை எதிர்கொள்வதற்கான தேதியை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே 20) அறிவிக்கவுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்ற புகார் தொடர்பான சவாலை நிரூபிக்கும் தேதியை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவிக்கப்படும்' என்றார்.
அதன்படி, தில்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சீட்டு சரி பார்க்கும் துண்டுச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கவுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸிம் ஜைதி பேசியபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் நிரூபிக்கலாம் என்றார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், எதிர்காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு சரிபார்க்கும் துண்டுச்சீட்டு வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின. சில அரசியல் கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், ஆதலால் வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தல் முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.
கடந்த 2009-ஆம் ஆண்டிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தபோது, இதேபோன்று தேர்தல் ஆணையத்தால் சவால் விடுக்கப்பட்டது. அந்நேரத்தில் தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று யாரும் நிரூபிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com