வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த வகையிலும் முறைகேடு செய்ய இயலாது என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த வகையிலும் முறைகேடு செய்ய இயலாது என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்துவதே நம்பகமானது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது பெரும்பாலான வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ஆம் ஆத்மி உள்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே இருந்த வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தின.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மீதும் அக்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயாரா? என்றும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு (சட்டத் துறை) அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அதன்படி, காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையிலான நிலைக் குழு முன்பு துணை தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, விஜய் தேவ் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். அப்போது அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் தேர்தல் நடைமுறையில் தற்போதைக்கு மிகவும் நம்பகமானவை. அவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் சிறிதளவும் இல்லை. ஒரு தரப்புக்கு சாதகமான வகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவே முடியாது.
வருங்காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com