வேலைவாய்ப்பு விகிதம் பொய் பரப்புரை செய்கிறது மத்திய அரசு: காங். குற்றச்சாட்டு

அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய பாஜக அரசு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய பாஜக அரசு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் அனைத்து துறைகளும் சரிவடைந்து வருவதாகவும், இதனை மறைத்து மத்திய அரசு சாதனைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அபிஷேக் சிங்வி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்ததாக பொய்யான தகவல்களை மத்திய அரசு கூறி வருகிறது.
வளர்ச்சியடைந்த தேசம் உதயமாகி வருகிறது என்ற பெயரில் சாதனைக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக 'மோடி உற்சவம்' என்ற பெயரில் தனிநபர் துதி பாடும் நிகழ்ச்சிகளை பாஜக நடத்தலாம். அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண்மை உள்பட அனைத்து துறைகளிலும் பெரும் வீழ்ச்சியை நாடு சந்தித்து வருகிறது.
வங்கிகள் சார்பில் வழங்கப்படும் கடன்களின் வளர்ச்சி விகிதம் கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தை விட மிகக் குறைவான அளவையே தற்போதைய அரசு எட்டியுள்ளது. அதாவது கடந்த 2010-11-ஆம் நிதியாண்டில் 9.29 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஆனால், கடந்த நிதியாண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 1.35 லட்சமாகவே இருந்தது.
இந்தத் தகவலை மறைத்துவிட்டு பொய்யான பரப்புரையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com