ஹோமியோபதி, இந்திய மருத்துவ முறைகளுக்கு பிரணாப் பாராட்டு

நாட்டின் சுகாதாரத் துறையில் ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகள் முக்கியப் பங்காற்றி வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
6-ஆவது டாக்டர் மாலதி ஆலன் நோபிள் விருது வழங்கும் விழாவில் ஹோமியோபதி மருத்துவர் சுபேந்து பட்டாச்சார்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
6-ஆவது டாக்டர் மாலதி ஆலன் நோபிள் விருது வழங்கும் விழாவில் ஹோமியோபதி மருத்துவர் சுபேந்து பட்டாச்சார்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

நாட்டின் சுகாதாரத் துறையில் ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகள் முக்கியப் பங்காற்றி வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோமியோபதி விருது வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
ஹோமியோபதி மருத்துவ முறை தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏனெனில், இது ஆங்கில மருத்துவ முறையான அலோபதியை விட செலவு குறைவானது. மேலும், பக்க விளைவுகளும் இல்லாததாகும்.
நம் நாட்டில் தரமான மருத்துவர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தச் சூழலில் ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு தற்போது அதிக அளவில் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர் என்றார் பிரணாப் முகர்ஜி.
அவருக்கு முன்பு இந்த விழாவில் பேசிய ஆலன் ஹோமியோபதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அசோக் குமார் 'குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜி இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்றார். இந்த நிறுவனம்தான் மேற்கண்ட விருது வழங்கும் விழாவை நடத்தியது.
விழாவில், நாட்டில் உள்ள 196 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் 6-ஆவது டாக்டர் மாலதி ஆலன் நோபிள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
மேலும் சிலருக்கு டாக்டர் ஆலன் மகாத்மா ஹானிமன் விருது, டாக்டர் சர்க்கார் ஆலன் சுவாமிஜி விருது, டாக்டர் மாலதி ஆலன் நினைவு விருது ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.
டாக்டர் மாலதி ஆலன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.பி.சர்க்கார் பேசுகையில் 'நாட்டு மக்கள்தொகையில் சுமார் 60 சதவீதம் பேருக்கு ஹோமியோபதி மருத்துவம் சேவையாற்றி வருகிறது. இந்த மருத்துவ முறையை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம்' என்றார்.
முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்த தினத்தையொட்டி, கொல்கத்தாவில் மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் மரியாதை செலுத்தினார். அப்போது மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி உடனிருந்தார்.
புதிதாக 10 அணு உலைகளுக்கு அனுமதி
நாட்டில் புதிதாக 10 அணு மின் உலைகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்கள் அனைவருக்கும் மின் இணைப்பு வசதிகள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மாஹி பன்ஸ்வாரா, மத்தியப் பிரதேச மாநிலம் சுட்கா, கர்நாடக மாநிலம் கைகா, ஹரியாணா மாநிலம் கோரக்பூர் உள்ளிட்ட இடங்களில் புதிதாக 10 அணு உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 7,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்னதாக தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய அணு உலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள இந்திய பொறியியல் அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான மின் தொகுப்பு திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த பிரணாப் முகர்ஜி, இதுதொடர்பாக பேசியதாவது: நாட்டில் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு இன்னமும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. சாமானிய மக்கள் அனைவருக்கும் அத்தகைய வசதிகள் சென்றடைய வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமே அந்த நிலையை எட்ட முடியும். தற்போதைய சூழலில் மின் தேவை அதிகரித்து வருகிறது. அதை ஈடு செய்ய சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்டவற்றின் வாயிலாக பெறப்படும் மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
புதிதாக 10 அணு உலைகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com