கேரள பாஜக தலைவருக்கு எதிரான வழக்கு உள்நோக்கம் கொண்டது

சமூக வலைதளமான முகநூலில் சர்ச்சைக்குரிய விடியோவைப் பதிவேற்றம் செய்ததாக கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனுக்கு எதிராக மாநில

சமூக வலைதளமான முகநூலில் சர்ச்சைக்குரிய விடியோவைப் பதிவேற்றம் செய்ததாக கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனுக்கு எதிராக மாநில அரசு பதிவு செய்துள்ள வழக்கு உள்நோக்கம் கொண்டது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள பையனூரைச் சேர்ந்தவர் ஆர்எஸ்எஸ் தொண்டரான சூரக்காடு பிஜு கடந்த 12-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் அண்மையில் முகநூலில் ஒரு கருத்தைப் பதிவேற்றம் செய்தார்.
மேலும் சூரக்காடு பிஜு கொலை செய்யப்பட்டதை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கொண்டாடுவது போன்ற விடியோ காட்சியையும் அவர் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தவறான தகவலை இணையதளத்தில் பரப்பியதாக கும்மணம் ராஜசேகரன் மீது போலீஸார் கடந்த 16-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், தங்கள் தொண்டர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கு மாநில அரசு முயற்சி மேற்கொள்வதாகக் கூறி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கும்மணம் ராஜசேகரனுக்கு எதிரான வழக்கு உள்நோக்கம் கொண்டது என்று கூறி கண்டனம் தெரிவித்த தலைவர்கள், அந்த வழக்கை சட்டரீதியாகச் சந்திப்பது என்றும் முடிவு செய்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்ககள் கூட்டத்துக்குப் பின் கும்மணம் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் தவறுகளை அம்பலப்படுத்துவதற்காக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊராட்சி மற்றும் மாநில அளவில் அடுத்த வாரம் போராட்டம் நடத்த உள்ளன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com