சீன எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருங்கள்: ராஜ்நாத் சிங்

"சீன எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்' என்று அந்த எல்லையைக் காக்கும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினருக்கும்,
சீன எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருங்கள்: ராஜ்நாத் சிங்

"சீன எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்' என்று அந்த எல்லையைக் காக்கும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினருக்கும், இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய - சீன எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிக்கிம் மாநிலம், காங்டாக்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்ளிங், அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோரும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்திய - சீன எல்லை, முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம். எனவே, இந்த எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
சுமார் 3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய - சீன எல்லையில், இந்திய - திபெத் எல்லைக் காவல் படையினர் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மிகுந்த துணிவுடன் அவர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
சில கருத்து வேற்றுமைகள் காரணமாக, இந்திய எல்லையில் சீனப் படையினர் அத்துமீறும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றன. தற்போது, அதுபோன்ற அத்துமீறல்கள் குறைந்துள்ளன.
இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் நிலவும் மிக மோசமான சூழ்நிலைகளால், அங்கு ரோந்துப் பணி மேற்கொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. அங்கு அடிப்படை வசதிகளை வலுப்படுத்தினால், மக்கள் இடம்பெயரமாட்டார்கள்.
எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து புத்தாக்க சிந்தனைகளுடன் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பரிந்துரைப்பதுடன், முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு 41 கிராமங்களை உருவாக்குவதற்காக, கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்திய - சீன எல்லையில் அமைக்கப்பட்டு வரும் 20 சாலைகளின் பணிகள், வரும் 2019-20இல் நிறைவடையும். மேலும் 48 சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
இமய மலையையொட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். அண்டை நாடான சீனா, இந்தியாவுடனான தனது எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள், ரயில் வழித்தடம், விமான நிலையங்கள் ஆகியவற்றை அமைத்துள்ளதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. "ஒரே மண்டலம், ஒரே பாதை' திட்டம் தொடர்பாக சீனா நடத்திய மாநாட்டை இந்தியா புறக்கணித்த சில தினங்களுக்குப் பின் மேற்கண்ட கூட்டத்தை மத்திய அரசு நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com