விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்: மோடி அரசு மீது ஜெய்ராம் ரமேஷ்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கவர்ச்சி விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்
விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்: மோடி அரசு மீது ஜெய்ராம் ரமேஷ்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கவர்ச்சி விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து குஜராத் மாநிலம், ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
பொருளாதார விவகாரங்களைப் பொருத்தவரை, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கவர்ச்சியான விளம்பரங்களுக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
நரேந்திர மோடியின் இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது விவசாயத் துறைதான்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சராசரியாக 9 சதவீத வளர்ச்சியடைந்து வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அந்த வளர்ச்சி வெறும் 3.4 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
கடந்த இரு ஆண்டுகளாக, உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலை 60 லட்சம் டன்கள் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக வெளிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுவது ஏன்? இதுதான் விவசாயத் துறையில் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டமா?
இந்திய விவசாயிகள் கடந்த ஆண்டு 22 லட்சம் டன் பருப்பு வகைகளை விளைவித்திருந்தனர். ஆனால், மத்திய அரசு 50 டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துள்ளது.
"பிரதம மந்திரி விவசாயக் காப்பீடு' திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ரூ.16,000 கோடி வசூலித்தன. ஆனால், அதில் ரூ.7,000 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின் கடைசி 3 ஆண்டுகளில் விவசாயத் துறை 3.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் விவசாயம் வெறும் 1.7 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது.
வேலைவாய்ப்பு: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் குறைவாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 1.5 லட்சத்துக்கும் குறைவாகவுமே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது மிகவும் கவலையை அளிக்கக் கூடிய தகவலாகும். மோடியின் வாக்குறுதிகளுக்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் இமாலய வேறுபாடு உள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசின் அடிப்படை வங்கிக் கணக்குத் திட்டம், விவசாயப் பாசன நலத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு "ஜன்தன் திட்டம், பிரதம மந்திரி கிருஷி சிச்சாய் திட்டம்' என்று பெயரை மட்டும் மாற்றி, தனக்குப் பெயர் சேர்த்துக் கொள்வதில் நரேந்தி மோடி கைதேர்ந்தவராக
உள்ளார்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு என்ற விவரத்தை பிரதமரும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் வெளியிட வேண்டும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com