கல்வீச்சு போராட்டக்காரர்களுக்கு பதில் எழுத்தாளர் அருந்ததி ராயை ஜீப்பில் கட்டி வைக்கலாம்: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு!

காஷ்மீரில் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டவரை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்ததற்கு பதில் எழுத்தாளர் அருந்ததி ராயை ஜீப்பில் கட்டி வைக்கலாம் ...
கல்வீச்சு போராட்டக்காரர்களுக்கு பதில் எழுத்தாளர் அருந்ததி ராயை ஜீப்பில் கட்டி வைக்கலாம்: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு!

புதுதில்லி: காஷ்மீரில் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டவரை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்ததற்கு பதில் எழுத்தாளர் அருந்ததி ராயை ஜீப்பில் கட்டி வைக்கலாம் என்ற பாஜக எம்.பியின் பேச்சால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் கிழக்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பரேஷ் ராவல்.  பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'கல்வீச்சு போராட்டக்காரரை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்ததற்கு பதில் எழுத்தாளர் அருந்ததி ராயை கட்டி வைக்கலாம்' என்று பதிவிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்த சமயத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்  தொடர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பு பணியிலிருந்த துணை ராணுவ படையினர் மற்றும் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கி, சேதம் உண்டாக்கினார். 

போராட்டக்காரர்கள் காவல்துறையினரை குறி வைத்து கல் எறிவதை தடுக்கும்பொருட்டு, ராணுவம் ஒரு உபாயத்தை பின்பற்றியது. அதாவது பிடிபட்ட போராட்டக்காரர்களில் ஒருவரை, ராணுவ ஜீப் ஒன்றின் முகப்பில் வைத்துக் கட்டி விட்டு,அந்த வாகனத்தைஓட்டி செல்வதன் மூலம், அந்த நபரை 'மனித கேடயமாக' பயன்படுத்தி கல்லெறிதலில் இருந்து தப்பிக்கலாம் என்பது திட்டம். ஆனால் ராணுவத்தின் இந்த செய்கையானது கடும்கண்டனத்திற்கு உள்ளது.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாரதிய ஜனதா மீதும்,காஷ்மீர் பகுதியில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் எழுத்தாளர் அருந்ததி ராய்  தொடர்ந்து அதிருப்திக்குரல் எழுப்பி வருகிறார். அவரை கண்டிக்கும் பொருட்டு பாஜக எம்.பியான பரேஷ் ராவல் இப்படிஒரு கருத்தை வெளியிட்டுருக்கிறார்.   

அவரது இந்த கருத்து டிவிட்டர் தளத்தில் கடும் எதிர்ப்பினை சந்தித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் அவரது கருத்து அமைந்திருப்பதாக பலர் எதிர் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். 

காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ராவலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதே வேளையில், மத்திய அமைச்சரான ஸ்ம்ருதி இராணி செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான எந்த ஒருகருத்தை யார் கூறினாலும் பாஜக அதனை ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com