மாட்டியும் விடலாம்; மாட்டிக்காமலும் தப்பிக்கலாம்: சாலை விதிகள் சொல்வது என்ன?

ஹெல்மெட் மற்றும் வாகனத்துக்கான உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பயணம் செய்து போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அளவுக்கு மட்டுமே நமக்கு சாலை விதிகள் அத்துப்படி.
மாட்டியும் விடலாம்; மாட்டிக்காமலும் தப்பிக்கலாம்: சாலை விதிகள் சொல்வது என்ன?

சென்னை: ஹெல்மெட் மற்றும் வாகனத்துக்கான உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பயணம் செய்து போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அளவுக்கு மட்டுமே நமக்கு சாலை விதிகள் அத்துப்படி.

அதற்கு மேல் கேட்டால், நோ பார்க்கிங் ஏரியாவில் வண்டியை விடக் கூடாது, சிக்னலில் சாலை விதியை மீறக் கூடாது என்று சொல்வோம்.

சாலை விதிகளை நன்கு அறிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இன்றளவில் மிக மிகக் குறைவு. அதிலும் சில வாகன ஓட்டிகள் வாகனமும் ஓட்டத் தெரியாமல், நினைத்த இடத்தில் திரும்புவதும், கட் செய்வதும் பலருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும். என்னவாக இருந்தாலும், சாலை என்பது 'நீதி நேர்மையற்ற நீதிமன்றம்' என்பதையே ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் வகையில், சாலை விதியை மீறுபவர்கள் சிறு கீறலும் இல்லாமல் தப்பிப்பதும், பார்த்து பார்த்து வண்டியை ஓட்டியபவர்களுக்கு எலும்பு உடைவதும் அன்றாடச் செய்திதான்.

சரி இவ்வளவையும் கூறிவிட்ட பிறகு இன்னும் தலைப்புக்கு வரவில்லை என்றால் நீங்கள் டென்ஷன் ஆவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன?

விஷயத்துக்கு வரலாம், ஓரிடத்துக்கு நாம் செல்லும் போது, அங்கு சாலை விதியை முறையாகப் பின்பற்றி, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நம் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறோம். வெளியே வந்து பார்த்தால், நம் வாகனத்தை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு, சாலை விதியை மீறி யாரேனும் வாகனத்தை நிறுத்தியிருந்தால் நமக்கு முதலில் கோபம் வரும்.

அடுத்து அந்த வாகனம் வரும் வரை காத்திருந்து, அவரிடம் சண்டை போட்டு பிறகு நமது வாகனத்தை எடுப்போம். இரு சக்கர வாகனமாக இருந்தால் அதனை வேறு இடத்துக்கு தள்ளிவிட்டு நம் வாகனத்தை எடுப்போம். இதில், சட்ட விதி சொல்வது என்னவென்றால், உங்கள் வாகனத்தை எடுக்க முடியாத அளவுக்கு, சாலை விதியை மீறி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் குறித்து போக்குவரத்துக் காவல்துறைக்கு புகார் அளித்து, அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்க நீங்கள் வழி வகை செய்ய முடியும். இதை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

அதே போல, இன்னொரு விதி என்னசொல்கிறது என்றால், காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்புகிறீர்கள். வழக்கம் போல ஹெல்மெட் எடுக்க மறந்துவிட்டால்... வழியில் போக்குவரத்துக் காவலர் இல்லை என்றால் பரவாயில்லை. இருந்து, அவர்கள் உங்களை நிறுத்தினால், நீங்கள் காரணம் கூறி அபராதமும் செலுத்துகிறீர்கள். பிறகு அப்படியே கிளம்பி விடலாமா? இல்லை, அபராதம் செலுத்தியதற்கான ரசீதை எழுதி மறக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், இன்னும் அலுவலகம் போய் சேரவில்லை. வழியில் வேறு போக்குவரத்துக் காவலர் நிறுத்தலாம், மாலை வீட்டுக்குத் திரும்பும் போது இதே சிக்கலில் மாட்டலாம். எனவே, அபராதம் செலுத்தியதற்கான ரசீது உங்கள் கையில் இருந்தால் ஒரே குற்றத்துக்காக பல முறை அபராதம் செலுத்துவதில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

இந்த ரசீது உங்களை மீண்டும் அபராதம் செலுத்துவதில் இருந்து தான் காப்பாற்றுமே தவிர, உங்கள் தலையை அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com