பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு: இந்தியா அதிரடி

ஜம்மு-காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் அந்நாட்டின் நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் பூண்டோடு அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானின் நௌஷேரா ராணுவ நிலை மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சி.
பாகிஸ்தானின் நௌஷேரா ராணுவ நிலை மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சி.

ஜம்மு-காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் அந்நாட்டின் நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் பூண்டோடு அழிக்கப்பட்டன.
இதுகுறித்து இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாகிஸ்தானை ஒட்டிள்ள ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த ஊடுருவலுக்கு அந்நாட்டு ராணுவம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவது கண்டறியப்பட்டது.
இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காகவே ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு ராணுவ நிலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது என்று இந்திய ராணுவம் முடிவு செய்தது.
அதன்படி, காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவ வீரர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கிகளாலும் சிறிய ரக பீரங்கிகளாலும் தாக்குதல் நடத்தினர்.
இந்த அதிரடித் தாக்குதலில் நௌஷேரா பகுதியில் உள்ள ராணுவ நிலை பூண்டோடு அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் எத்தனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பது குறித்து தெரியவரவில்லை என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தாக்குதலைக் காட்டும் வரைபடம்
தாக்குதலைக் காட்டும் வரைபடம்


இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பான விடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால், அவற்றில் தாக்குதல் நடத்தப்பட்ட தேதி மற்றும் நேரம் ஆகியவை ஏதும் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதிலும், இந்தத் தாக்குதல் கடந்த 9-ஆம் தேதி நடத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலைகளை பாகிஸ்தான் எல்லைப் படையினர் துண்டித்த சம்பவத்துக்கு ஒருவாரத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதலை இந்திய ராணுவத்தினர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேட்லி பாராட்டு: இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலானது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவி வந்த பாகிஸ்தான் ராணுவ நிலை அழிக்கப்பட்டிக்கிறது.
இதற்காக இந்திய ராணுவத்தினருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவ இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கேள்வி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் இன்னமும் அழிக்கப்படாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்த அந்நாட்டின் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அதிரடி தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பாராட்டுகளைக் கூறிக் கொள்கிறேன். அதேநேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை அழிப்பதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவது ஏன்? அந்த முகாம்கள் இன்னமும் அழிக்கப்படாததற்கு காரணம் என்ன என்று சுர்ஜேவாலா கேள்வியெழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் மறுப்பு
பாகிஸ்தானின் ராணுவ நிலை மீது இந்திய ராணுவம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பு பிரிவின் இயக்குநர் ஆசிஃப் கஃபூர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானின் நௌஷேரா பகுதியில் உள்ள ராணுவ நிலையை தாக்கி அழித்துவிட்டதாக இந்தியா கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.
அதுபோன்ற எந்தத் தாக்குதலும் நடத்தப்படவும் இல்லை; எங்கள் நாட்டின் ராணுவ நிலை எதுவும் அழிக்கப்படவும் இல்லை. இந்தியாவின் கூற்று பொய்யானது என அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com