குடிநீர் லாரிகள் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை

தில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரூ. 400 கோடி மதிப்பிளான குடிநீர் லாரிகள் கொள்முதல் ஒப்பந்தத்தின்போது விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?

தில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரூ. 400 கோடி மதிப்பிளான குடிநீர் லாரிகள் கொள்முதல் ஒப்பந்தத்தின்போது விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என அரசு பட்டய கணக்காயரிடம் (மத்திய வருவாய்) தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை கருத்து கேட்டுள்ளது.
இந்தத் தகவலை தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவர் முகேஷ் குமார் மீனா உறுதி செய்துள்ளார். ஆனால், இதுகுறித்த மேலும் தகவல்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
குடிநீர் லாரிகள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாமதப்படுத்தியதாக அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட கபில்
மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கபில் மிஸ்ரா கடந்த வாரம் ஆஜராகி கேஜரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அளித்தார். கேஜரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமாரிடமும் கடந்த வாரம் தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திடமும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி இருந்தது. ஆம் ஆத்மி அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 385 ஸ்டைனஸ் ஸ்டீல் குடிநீர் லாரிகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்தது. இந்தக் குழு அளித்த அறிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தில்லி அரசு, அப்போதைய துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com