சுயசரிதை 3-ஆவது தொகுப்புப் பணியில் பிரணாப்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமது சுயசரிதை மூன்றாவது தொகுப்பு எழுத்துப் பணியில் மிகத் தீவிர ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
சுயசரிதை 3-ஆவது தொகுப்புப் பணியில் பிரணாப்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமது சுயசரிதை மூன்றாவது தொகுப்பு எழுத்துப் பணியில் மிகத் தீவிர ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி, தமது நினைவில் நிழலாடும் சம்பவங்கள் குறித்தும் அதில் தொடர்புடைய நண்பர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருடனும் பேசி குறிப்புகளை எடுத்துக் கொள்கிறார். தமது அன்றாட நிகழ்வுகளுக்கு இடையே சுயசரிதையின் நினைவலைகளை எழுத்து வடிவில் கொண்டு வர அவர் நேரம் ஒதுக்கி வருகிறார்.

13-ஆவது குடியரசுத் தலைவர்: நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராக 2012, ஜூலை மாதம் பதவியேற்ற பிரணாப் முகர்ஜி, நாட்டின் தலைசிறந்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகவும் பழுத்த அனுபவம் மிக்க நாடாளுமன்றவாதியாகவும் கருதப்படுகிறார். 1969-ஆம் ஆண்டில் நாடாளுமன்றவாதியாக அரசியல் உலகில் அங்கீகாரம் பெற்ற அவர், அதன் பிறகு பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார். 1991-96 ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.
பல்வேறு பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் பணியாற்றிய அனுபவம் மிக்க அவர், நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தின்படி மன்மோகன் சிங்குக்கு சென்றது. இருப்பினும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பாதுகாப்பு, வெளியுறவு, நிதி ஆகிய துறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பிரணாப் முகர்ஜி கவனித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி 2012-இல் தேர்வு செய்யப்பட்டார்.
சுயசரிதை நூல்: இந்நிலையில், தமது வாழ்வின் பசுமையான நினைவுகளை புத்தக வடிவில் கொண்டு வர பிரணாப் முகர்ஜி தீர்மானித்தார். இதையடுத்து, தமது சுயசரிதை நினைவுகள் அடங்கிய புத்தகத்தை மூன்று தொகுப்புகளாக தயாரிக்க அவர் முடிவெடுத்தார்.
அதன்படி முதலாவது தொகுப்பு, "சிக்கலான வருடங்கள்' என்ற பெயரில் 2014, டிசம்பர் 11-இல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்துக்கு பதிலாக மாற்று அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது, இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது போன்ற நினைவுகளை தமது அரசியல் அனுபவங்களுடன் மேற்கோள்காட்டி, தமது முதலாவது தொகுப்பில் பிரணாப் முகர்ஜி இடம் பெறச் செய்தார்.
இதையடுத்து, இரண்டாவது தொகுப்பு கடந்த ஆண்டு ஜனவரி 28-இல் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்துக்கு "இந்திரா காந்தியின் காலங்கள்' என்று பிரணாப் முகர்ஜி பெயரிட்டிருந்தார்.
ஆனால், குடியரசுத் தலைவர் பதவியை வகித்து வருவதால் பல்வேறு சர்ச்சைக்குரிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான கேள்விகளுக்கு பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் விடை அளிக்காமல் தவிர்த்திருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
மூன்றாவது தொகுப்பு: இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு செய்யவுள்ள பிரணாப் முகர்ஜி, தற்போது மூன்றாவது தொகுப்பு புத்தகத்தை இறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்துக்கான பெயரை இன்னும் பிரணாப் தீர்மானிக்கவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமத்தை "ரூபா பதிப்பகம்' பெற்றுள்ளது. 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அரசியல் பயணம் கடந்து வந்த பாதை, அப்போது நாடு எதிர்கொண்ட சவால்கள், நாடாளுமன்றவாதியான பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவரானது எப்படி போன்றவை புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரி
கிறது.

"புதிய தகவல்கள்'

இது குறித்து "தினமணி' நிருபரிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "எனது மூன்றாவது தொகுப்பு புத்தகம் விரைவில் வெளியிடப்படும். 1969-இல் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று விரும்பி அப்பதவியை ஏற்றேன். அப்போது நான் தொடங்கிய ஐந்து ஆண்டுகள் பொதுவாழ்வுப் பணி முதல் தற்போது குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது ஆற்றும் பணி குறித்தும் மூன்றாவது தொகுப்பில் புதிய தகவல்களுடன் விளக்கியுள்ளேன். பல தகவல்களைப் பதிவு செய்ய குடியரசுத் தலைவர் பதவி அனுமதிக்கவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com