பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மே 30-இல் அத்வானி, ஜோஷி ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் வரும் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மே 30-இல் அத்வானி, ஜோஷி ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் வரும் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் அழைப்பின்பேரில் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் திடீரென்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர். அப்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் மூண்டது. இதில், சுமார் 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
லக்னௌ நீதிமன்றத்தில் 23 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அத்வானி உள்பட 7 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மற்றாரு வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோரை இந்த நீதிமன்றங்கள் விடுவித்தன. அலாகாபாத் உயர் நீதிமன்றமும் அந்த நீதிமன்றங்களின் உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி 40 பக்க உத்தரவைப் பிறப்பித்தது. அதில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையை 25 ஆண்டுகள் தாமதம் செய்ததற்கு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து 2 ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், ரேபரேலியில் நடைபெற்றுவந்த இதுதொடர்பான வழக்கையும் ஒன்றிணைத்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, லக்னெü சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தினசரி அடிப்படையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிவசேனை முன்னாள் எம்.பி. சதீஷ் பிரதான், விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்கள் உள்பட 6 பேருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: லக்னௌ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அத்வானி உள்ளிட்ட 5 பேர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், இவ்வழக்கில் தொடர்புடைய சிவசேனை பிரமுகர் சதீஷ் பிரதான் மட்டும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேர் ஆஜராகாததால் பிரதானுக்கு எதிராக மட்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வாய்ப்பில்லை என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தெரிவித்தார்.
மேலும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் வரும் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, ரேபரேலி நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக லக்னௌ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியின் பெயர் அடிபடும் நிலையில், இந்த வழக்கு அவருக்கு அரசியல் ரீதியில் பின்னடவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com