மீட்கப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கே: பிரதமர் மோடி

ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.
அஸ்ஸôம் மாநிலம் சாதியாவில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி. (உள்படம்) பாலத்தைத் திறந்துவைத்துப் பேசுகிறார் பிரதமர் மோடி.
அஸ்ஸôம் மாநிலம் சாதியாவில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி. (உள்படம்) பாலத்தைத் திறந்துவைத்துப் பேசுகிறார் பிரதமர் மோடி.

ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று வெள்ளிக்கிழமையுடன் (மே 26) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் கனவு காணும் புதிய இந்தியாவில் எந்தத் துறையும் வளர்ச்சியடையாமல் இருக்காது. அதற்கு விவசாயிகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ள வரும் 2022-ஆம் ஆண்டின்போது நமக்கு புதிய நவீன இந்தியா தேவை.
தில்லி செங்கோட்டையில் நான் சுதந்திர தின உரையாற்றியபோது கழிவறைகள் குறித்துப் பேசியதற்காக என்னை எதிர்க்கட்சியினர்
விமர்சித்தனர். எனினும், இதுபோன்ற சிறிய விஷயங்கள், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு எப்படி பயனளிக்கும் என்பது எனக்குத் தெரியும். நான்கு லட்சம் கழிவறைகளைக் கட்டியதன் மூலம் நமது பணியில் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்பதைக் காட்டியுள்ளோம்.
தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மக்களுக்கு என் நன்றி. கருப்புப் பணத்துக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதால் நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும், அதை நான் நிச்சயம் செய்வேன். ஊழலும் பினாமி சொத்துகளும் ஊக்குவிக்கப்பட முந்தைய ஆட்சிகளே காரணம்.
ஒரு காலத்தில் மக்கள் கருப்புப் பணம் பற்றி மக்கள் பேச மட்டுமே செய்தனர். ஆனால், இன்று ஜன்தன் (மக்கள் நிதி என்ற பெயரிலான அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம்), டிஜிதன் (மின்னணு பணப் பரிவர்த்தனை) ஆகிய திட்டங்கள் குறித்து மக்கள் விவாதிக்கின்றனர்.
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் என்ற நடவடிக்கையானது மிகவும் கடினமான முடிவாகும். எனினும், நமது நேர்மையில் கொண்ட நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மோடு துணை நின்றனர். இந்த நடவடிக்கையை முன்வைத்து மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தவும், அவர்களைத் தூண்டி விடவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால், மக்களின் ஆசியோடு அனைத்துப் பிரச்னைகளையும் எனது அரசு சமாளித்தது. எனது அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் எனக்குத் துணை நிற்கும் 125 கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 90 லட்சம் இந்தியர்கள் தங்களின் வருவாயைத் தெரிவித்து, வரியைச் செலுத்தினர். கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டபோதிலும் நமக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களால் தற்போது மாற்றத்தைக் காண முடியும். மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே கருப்புப் பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைளை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணமானது ஏழைகளுக்காக செலவிடப்படும். இந்த விஷயத்தில் நான் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எனினும், நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கைகளை எடுக்க நான் தயங்க மாட்டேன்.
எனது அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் ஏழைகளின் நலவாழ்வுக்கான பலன்களை உரியவர்கள் பெற உதவியுள்ளன. நேரடி மானியத் திட்டமானது ஆண்டுதோறும் தவறானவர்களின் கைகளுக்கு ரூ.60,000 கோடி செல்வதைத் தடுத்துள்ளது.
மிகப்பெரிய அளவில் நம்மால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம். ஒரே நாளில் 104 செயற்கைக்கோள்களை ஏவி அதை நிரூபித்துள்ளோம்.
நீங்கள் (மக்கள்) என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்படுவோம் என்று காமாக்யா தேவி கோயில் கொண்டுள்ள இந்த மண்ணில் உறுதியளிக்கிறேன் என்றார் மோடி.

"ஆட்சியை மதிப்பீடு செய்யுங்கள்'

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாண்டு ஆட்சி தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி கூறியிருப்பதாவது:
அனைவரது ஒத்துழைப்பாலும், அனைவரது நம்பிக்கையாலும் நாட்டில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து "நரேந்திர மோடி செயலி' (செல்போன் ஆஃப்) மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று எங்களது 3 ஆண்டுகால ஆட்சியை மதிப்பீடு செய்யலாம்.
"மத்திய அரசு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?, எதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்?; எதில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்' என்று அந்தச் செயலி மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்று மோடி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com