வாக்குப்பதிவு இயந்திர சவால்: விதிமுறைகளைத் தளர்த்த காங்கிரஸ் வலியுறுத்தல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களளில் முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்ட விடுக்கப்பட்டுள்ள சவாலுக்கான மூன்று விதிமுறைகளைத் தளர்த்துமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களளில் முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்ட விடுக்கப்பட்டுள்ள சவாலுக்கான மூன்று விதிமுறைகளைத் தளர்த்துமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் பொறுப்பாளரான ரண்தீப் சுர்ஜேவாலா, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா? என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. இந்தச் சவாலானது நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாகவும், சவாலை ஏற்பவர்கள் அதை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக, இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும், விதிமுறைகளும் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை விரிவாக சோதிப்பதைத் தடுத்து விடுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் முன்வைக்கப்படும் மூன்று விதிமுறைகளையும் தளர்த்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு தங்களை வலியுறுத்துகிறேன். ஏனெனில், தங்களது முன்முயற்சியின் நம்பகத்தன்மையை இந்த விதிமுறைகள் நீர்த்துப் போகச் செய்கின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுப் பிரிவுகள் மற்றும் வாக்களிக்கும்
பொத்தான்கள் உள்ளடங்கிய பகுதி ஆகியவை மட்டும் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இல்லாமல் மதர்போர்டு உள்ளிட்ட பகுதிகளையும் சவாலுக்கு உட்படுத்தும் நோக்கில் 3 விதிமுறைகளையும் தளர்த்துவது குறித்து தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முடியுமா? என்ற சவாலை ஏற்பவர்கள் அதை வரும் ஜூன் 3-ஆம் தேதி நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்காகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் வெள்ளிக்கிழமையுடன் (மே 26) முடிவடைந்தது. இதுவரை தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com