பன்முகத் தன்மையே நமது வலிமை: பிரதமர் மோடி

""பன்முகத் தன்மையே நமது வலிமை'' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஆக்கப்பூர்வமான விமர்சனங்களே ஜனநயாகத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பன்முகத் தன்மையே நமது வலிமை: பிரதமர் மோடி

""பன்முகத் தன்மையே நமது வலிமை'' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களே ஜனநயாகத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி, "மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றி வருகிறார். அவரது தலைமையிலான மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரையாற்றினார். அதில், அவர் பேசியதாவது:
இந்த வானொலி நிகழ்ச்சியில் நான் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகச் சிலர் விமர்சிக்கிறார்கள். சிலர் இந்த நிகழ்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.
"இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மட்டுமே பேசுகிறார்; மக்களின் குறைகளை அவர் கேட்பதில்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியன்று முதன் முதலில் மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் பேசியபோது, எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சி அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த வானொலி நிகழ்ச்சியில் நான் பேசும்போது, எனது குடும்ப உறுப்பினருடன் அமர்ந்து பேசுவதைப் போல் உணர்கிறேன். இந்த உணர்வே தங்களுக்கும் ஏற்படுவதாக பல குடும்பத்தினர் எனக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த வானொலி நிகழ்ச்சி மூலம், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஓர் உறுப்பினர் போல நான் மாறிவிட்டேன்.
"மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியின் உரைத் தொகுப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அந்த நூலுக்கு அபுதாபியில் வசிக்கும் அக்பர் என்ற கலைஞர், ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் ஓவியங்களை வரைந்து கொடுத்து உயிரூட்டினார். அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த நூல் வெளியீட்டு நிகழ்வு எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.
விமர்சனங்களுக்குப் பாராட்டு: எனது தலைமையிலான மூன்று ஆண்டு கால அரசின் செயல்பாடுகளை பல்வேறு ஊடகங்கள் ஆய்வு செய்துள்ளன. சில ஊடகங்கள், அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளன. சில ஊடகங்கள் குறைகளை விமர்சித்துள்ளன.
அரசின் செயல்பாடுகளை கடந்த ஒரு மாதமாக ஆய்வு செய்த அனைத்து ஊடகங்களையும் பாராட்டுகிறேன். ஊடகங்களின் கருத்துகளும், விமர்சனங்களும் மதிப்புமிக்கவை. அந்த விமர்சனங்கள், குறைகளைச் சரி செய்வதற்கு வாய்ப்பளித்துள்ளன.
ஜனநாயகத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமெனில், இதுபோன்ற விமர்சனங்கள் மிகவும் முக்கியமாகும். இந்த விமர்சனங்களில் இருந்து பாடம் கற்று, அடுத்த கட்டத்தை நோக்கி அரசு செல்லும்.
ரமலான் வாழ்த்து: முஸ்லிம் சமூகத்தினர் பகலில் நோன்பிருக்கும் ரமலான் மாதம், ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த நாளில், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பன்முகத் தன்மையே நமது வலிமையாகும். இறை நம்பிக்கை கொண்டவர்களும், இறை மறுப்பாளர்களும், கடவுளை வழிபடுவோரும், அதை எதிர்ப்போரும் இந்தியாவில் அமைதியுடன் வாழ்கிறார்கள். அதற்காக நாம், பெருமைப்படுவோம். எல்லா மதங்களும், நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றையே போதிக்கின்றன.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்:

மே மாதம் 28-ஆம் தேதி, நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட வீர சாவர்க்கரின் பிறந்த தினமாகும். இந்த நாளில், நாட்டின் விடுதலைக்காக தங்கள் இளமைக் காலத்தை சிறையில் தொலைத்தவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், கொடுமைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கு இளைய சமுதாயத்தினர், அந்தமானுக்குச் சென்று சிறைகளைப் பார்க்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

4,000 நகரங்களில் கழிவு மேலாண்மைத் திட்டம்

உலக சுற்றுச் சூழல் தினத்தன்று 4,000 நகரங்களில் கழிவுகள் மேலாண்மை திட்டம் தொடங்கப்படும் என்று பிரமதர் மோடி கூறினார்.
தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணுவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச் சூழல் தினமான வரும் ஜூன் 5-ஆம் தேதி, மாநில அரசுகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடன் மிகப் பெரிய கழிவு மேலாண்மை பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 4,000 நகரங்களில் திடக் கழிவுகள், திரவக் கழிவுகள் சேகரிக்கும் பணி தொடங்கப்படும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாஸி ஊராட்சி, திறந்த வெளியில் மலம் கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அந்த ஊராட்சியின் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com