பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக முக்கிய தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. 
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக முக்கிய தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி, லக்னெள ஆகிய நகரங்களில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் இரு வேறு வழக்குகள் நடைபெற்று வந்தன. அந்த இரு வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, லக்னெள சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, அத்வானி(89), முரளி மனோகர் ஜோஷி (83), உமா பாரதி (58), வினய் கத்தியார் (62) உள்ளிட்டோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 2 ஆண்டுகளில் முடித்து வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னெள சிறப்பு நீதிமன்றம், இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்களிடம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம், கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மறுநாள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள், வரும் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் ஆஜர் ஆனார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனவுடன் அத்வானி, ஜோஷி ஆகியோர் தங்களை சொந்த ஜாமீனில் வெளியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் நிபந்தனை  ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com