பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவு
நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள நகருக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள நகருக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு அவர்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அத்வானி முன்னிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், நீதிமன்றம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பது அரசியல் அரங்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றுப் பக்கத்தில் நீங்காத கறையை ஏற்படுத்தியது இச்சம்பவம். இதில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சுமார் 25 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது.


அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா உள்ளிட்டோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 2 ஆண்டுகளில் முடித்து வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னெளவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்களிடம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.யாதவ், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், செவ்வாய்க்கிழமை (மே 30) அவர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அத்வானி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
அப்போது, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அவர்களது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிப்புக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அந்தச் சம்பவத்தை தடுக்க தாங்கள் முயன்றோம் என்றும் அவர்களது தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ், அத்வானி உள்பட 6 பேர் மீதும் கிரிமினல் சதித் திட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதேபோன்று பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர்களான ராம்விலாஸ் வேதாந்தி, வைகுந்த் லால் சர்மா, சம்பத் ராய் பன்சால் உள்ளிட்ட 6 பேர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் மனு ஏற்பு: முன்னதாக, அத்வானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிபதி ஏற்றுக் கொண்டார். தலா ரூ.50,000 பிணைத் தொகையில் அத்வானி உள்பட 6 பேருக்கும் சொந்த ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
அத்வானியுடன் உ.பி. முதல்வர் சந்திப்பு
நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரப் பிரதேசம் வந்த அத்வானியை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் துணைப் பிரதமர் என்ற முறையில் அவருக்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. லக்னெளவில் உள்ள முக்கியப் பிரபலங்களுக்கான மாநில விருந்தினர் மாளிகைக்கு செவ்வாய்க்கிழமை காலை அத்வானி வந்தார். அதற்கு முன்னதாகவே அங்கு வந்து காத்திருந்த யோகி ஆதித்யநாத், அத்வானியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று பேசினார். இந்தச் சந்திப்பின்போது பாஜக மூத்த தலைவர்களும், மாநில அமைச்சர்களும் உடன் இருந்தனர். இதன் பிறகு நீதிமன்றத்துக்கு அத்வானி புறப்பட்டுச் சென்றார்.
பாஜக தலைவர்கள் களங்கமற்றவர்கள்: வெங்கய்ய நாயுடு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்கள் அனைவரும் களங்கமற்றவர்கள் என்பது விரைவில் நிரூபணமாகும் என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாஜக தலைவர்களுக்கு எதிராக முந்தைய மத்திய ஆட்சியாளர்கள் தொடுத்த வழக்கைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபடாது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்கள் அனைவரும் அப்பாவிகள். அவர்கள் களங்கமற்றவர்கள் என்பது விரைவில் தெரியவரும் என்றார் அவர்.
உமா பாரதி பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஊடகவியலாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாக வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அமைச்சராக இருக்கும் உமா பாரதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவரே முன்வந்து தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். நீதியும், அரசியல் சாசனமும் நிலை நாட்டப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com