ஜிஎஸ்டி-யால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது: ராகுல் கருத்துக்கு ஜேட்லி பதிலடி

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஊழல் குறைந்து தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பதிலடி அளித்தார்.
ஜிஎஸ்டி-யால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது: ராகுல் கருத்துக்கு ஜேட்லி பதிலடி

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பாஜக அரசு ஜிஎஸ்டி-யை அமல்படுத்தி நாட்டை அழித்துவிட்டது என்று குற்றஞ்சாட்டினார்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் கூறியதாவது:

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது. சரக்கு மற்றம் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் தொழில் செய்வதற்கான எளிமையான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வெற்றிபெற்றுவிட்டதாக பெரிதாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் மக்களின் மனநிலை வேறுமாதிரியாக உள்ளது.

மக்கள் ஜிஎஸ்டி-க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தாக்கம் வரும் குஜராத் தேர்தலில் தெரியவரும். பாஜக அப்போது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றார்.

இந்நிலையில், ராகுலின் இந்த கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் எளிமையாக ஊழல் செய்வது குறைந்து, எளிமையாக தொழில் தொடங்குவது வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்றார். 

உலக வங்கியின் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறியுள்ளது. இதனால் எளிமையாக தொழில் செய்ய ஏற்புடைய நாடுகளின் பட்டியலில் உள்ள 190 நாடுகளில் 100-ஆவது இடத்தில் உள்ளது. வரும் 2018 காலகட்டத்தின் அடிப்படையில் வளரும் சிறந்த 10 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com