ஹஃபீஸ் சயீத்துக்கும் கமல்ஹாசனுக்கும் வேற்றுமை கிடையாது: பாஜக

ஹிந்துக்களை அவமதித்த நடிகர் கமல்ஹாசன் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்ம ராவ் தெரிவித்தார்.  
ஹஃபீஸ் சயீத்துக்கும் கமல்ஹாசனுக்கும் வேற்றுமை கிடையாது: பாஜக

முன்பெல்லாம் வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஹிந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபடாமல் வாதத்தில் ஈடுபட்டு எதிர்தரப்பை வீழ்த்துவார்கள். இந்த பழமையான யுக்தி தோல்வியடைந்ததால் தற்போது ஹிந்துக்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே இனி ஹிந்துத் தீவிரவாதம் இல்லை என யாரும் கூற முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தனியார் பத்திரிகை ஒன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஹிந்துக்களின் மனதை காயப்படுத்திய கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறியதாவது:

இப்போதெல்லாம் நாட்டில் ஒரு மனநிலை உள்ளது. அது ஹிந்துக்களை தாழத்தி தங்களை உயர்த்திக்கொள்வது. இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோர் செய்து வந்தனர். ஏனெனில் அப்போதுதான் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியில் குறிப்பாக ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் நாடாளுமன்றத்திலேயே இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் உள்ளது என்றனர். இன்று அதையே நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார். இதன்மூலம் ப.சிதம்பரம், ஹஃபீஸ் சயீது ஆகியோருடன் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.

இது காங்கிரஸ் கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கை ஆகும். இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பி பாகிஸ்தானின் நிலையை உயர்த்த வழிவகை செய்கின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனுக்கும் கேரள அரசுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே தான் அவர் தன் கண்களைக் கட்டிக்கொண்டு தமிழகத்தை விட கேரளா முற்போக்குச் சிந்தனையுடன் இருப்பதாக சான்று அளிக்கிறார்.

ஏன் அங்கு நடைபெறும் சிகப்பு பயங்கரவாதம் அவரது கண்களுக்குத் தெரியவில்லையா? கேரளாவில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் அறியாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போன்று கமல்ஹாசன் பேசி வருகிறார். இதுமாதிரியான கீழ்நிலை அரசியலை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்றார்.

பி.எஃப்.ஐ. (PFI) பயங்கரவாத அமைப்பை பாதுகாக்கவே நடிகர் கமல்ஹாசன் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஹிந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்துவதையே அவர் கொள்கையாக வைத்துள்ளார். இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். ஹிந்துக்களை தொடர்ந்து அவமதித்து வரும் நடிகர் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com